மும்பை : மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்பட அவரது அணியின் 40 எம்.எல்.ஏக்களுக்கும், உத்தவ் தாக்கரே அணியின் 14 எம்.எல்.ஏக்களுக்கும் சபாநாயகர் ராகுல் நார்வேகார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்ல. பதவி பங்கீடு காரணமாக ஏற்பட்ட பிரச்சினையால் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியது.
ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கூட்டணி ஆட்சி நீடித்த நிலையில், முதலமைச்சராக உத்தவ் தாக்ரே நீடித்து வந்தார். இந்நிலையில் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே மீதான அதிருப்தியில் ஒன்று திரண்ட 39 எம்.எல்.ஏக்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணியாக சேர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றினர்.
மேலும், மகாராஷ்டிர முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதிவியேற்றுக் கொண்டார். பெருவாரியான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதை மேற்கொள்காட்டி சிவசேனா கட்சியின் பெயர் சின்னம் உள்ளிட்டவற்றை தங்கள் தரப்புக்கு வழங்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஏக்நாத் ஷிண்டே முறையிட்டார்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியே உண்மையான சிவசேனா கட்சி என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதேநேரம் தங்கள் தரப்பே உண்மையான சிவசேனா என உத்தவ் தாக்ரே தலைமையிலான அணி கூறி வருகிறது. இதனிடையே ஒருங்கிணைந்த சிவசோனவின் கொறடாவாக இருந்த எம்.எல்.ஏ. சுனில் பிரபு, ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகர் ராகுல் நர்வேகாருக்கு கடிதம் வழங்கினார்.
அதேபோல் ஷிண்டே தரப்பு உத்தவ் தாக்கரே அணியின் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கடிதம் வழங்கியது. இந்த விவகாரத்தில் சபாநாயகர் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஷிண்டே உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை உடனே எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என முறையிட்டது.
இந்த வழக்கில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தான் தகுதி நீக்க நடவடிக்கையை மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகார் தொடங்கி உள்ளார். அதன்படி தகுதி நீக்கம் தொடர்பான விளக்கம் கேட்டு சிவசேனாவின் இரு அணிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அணியில் உள்ள 40 எம்.எல்.ஏக்கள், உத்தவ் தாக்கரே அணியின் 14 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நோட்டீசுக்கு அடுத்த 7 நாளில் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. இவர்கள் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : மூக்கின் ஒரு பகுதியை இழந்த குழந்தை.. மருத்துவர்களின் கவனக்குறைவால் நிகழ்ந்ததா?