மும்பை: நாட்டில் கரோனா தொற்று முதல் அலையை விட இரண்டாம் அலையின் பாதிப்பு அதிகமாக இருந்தது. மேலும், அப்போது முதலே மருத்துவ நிபுணர்கள் கரோனா மூன்றாம் அலை குறித்து எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மும்பை, கரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தயாராக உள்ளதா என ஓஆர்எஃப் எனும் அப்சர்வர் அண்ட் ரிசர்ச் (Observor and Research Foundation) ஒரு ஆய்வு நடத்தியது.
அதன் அடிப்படையில் அந்த அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கை, தொற்றுநோயின் முதல், இரண்டாவது அலைகளின் முக்கியக் காரணிகளை அலசியுள்ளது. ஆக்ஸிஜன், தடுப்பூசி பற்றாக்குறையால் ஏற்பட்ட பாதிப்புகளையும் விளக்கியுள்ளது.
ஊரடங்கால் இடம்பெயர்ந்த தொழிலாளிகள், சடலங்களால் நிரம்பி வழிந்த மயானங்கள், அதில் பணியாற்றிய ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள் ஆகியோர் சந்தித்த நெருக்கடிகளையும் அந்த அறிக்கை அலசியுள்ளது.
மேலும் இந்த அறிக்கை, கரோனா மூன்றாவது அலைக்கு எதிராக மும்பை பிளஸ் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்துகிறது. இத்திட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை திட்டமிடுதல், பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டுள்ளது. ஓஆர்எஃப் தயாரித்த அறிக்கையை மகாராஷ்டிரா அமைச்சரும், சிவசேனா தலைவருமான ஆதித்யா தாக்கரே வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கோவிட்-19: குணமடைந்தவர்களை தாண்டி, 41,831 பேர் தொற்றால் பாதிப்பு