இது தொடர்பாக மாநில சுகாதார அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், “தொற்றுநோயின் இரண்டாவது அலை ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் கரோனா சோதனையை அதிகரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
பல ஐரோப்பிய நாடுகளில் தற்போது கரோனா இரண்டாவது அலை பாதிப்பு உள்ளாகியுள்ளது. அதன் அடிப்படையில் ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டாவது அலை தாக்க வாய்ப்புள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) வழிகாட்டுதலின்படி, அனைத்து சோதனைகளையும் செய்யுமாறும், இதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும் மாவட்ட நிர்வாகங்கள், நகராட்சி நிர்வாகங்கள், மருத்துவ அலுவலர்களை ஐ.சி.எம்.ஆர். கேட்டுக் கொண்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, ஒரு மில்லியன் மக்களுக்கு 140 சோதனைகள் என்ற விகிதம் இருக்க வேண்டும்.
மாநிலத்தின் நகர்ப்புற, கிராமப்புறங்களில் உள்ள காய்ச்சல் மையங்களின் உதவியுடன், இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கணக்கெடுப்பைத் தொடருமாறும் இந்தச் சுற்றறிக்கை மூலம் அலுவலர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. மருத்துவமனைகளில் தடையின்றி ஆக்ஸிஜன் வழங்கப்படுவதையும், ஆம்புலன்ஸ்களை முறையாக நிர்வகிப்பதையும் உறுதிசெய்யுமாறு மாவட்ட மற்றும் குடிமை நிர்வாகங்களை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், பொது இடங்களில் துப்புவதைத் தவிர்ப்பது மற்றும் தேவையற்ற பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது போன்ற சுகாதார விதிமுறைகளையும் பின்பற்றவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் அர்ச்சனா பாட்டீல் சுற்றறிக்கையில் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய புனே மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தேஷ்முக், “மாவட்டத்தில் தொற்றுநோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதன் காரணமாக, கரோனா வைரஸ் அல்லாத சிகிச்சைக்காக ஆக்ஸிஜனேற்றப்பட்ட கரோனா படுக்கைகளை மற்ற நோயாளிக்கு கிசிச்சை அளிக்க பயன்படுத்த மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தேவைப்படும்பட்சத்தில், அவை மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும். எந்தவொரு சூழ்நிலையையும் கையாள நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம், சோதனை, உள்கட்டமைப்பு, மனிதவளம் ஆகிய எல்லாவற்றையும் நாங்கள் வைத்திருக்கிறோம்" என்று அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிண் எண்ணிக்கை 17 லட்சத்து 57 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் ஐந்தாயிரத்து 11 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 100 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 202 ஆக அதிகரித்துள்ளது என்று அம்மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.