மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் நகரில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 10 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்தத் தகவலுக்கு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து நோயாளிகளும் ஒரே நாளில் நோயின் வீரியத்தால் ஏற்பட்ட பாதிப்பால்தான் உயிரிழந்தனர். மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை எனப் பதிலளித்துள்ளனர்.
இவ்விவகாரம், மகாராஷ்டிர புத்தாண்டு பண்டிகையான குடிபாட்வா நாளில், அரங்கேறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வசாயில் கிட்டத்தட்ட ஏழாயிரம் பேர் கரோனா பாதிப்பால் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
அதில், மூவாயிரம் பேருக்கு ஆக்சிஜன் வசதி தேவைப்படுகிறது. குறிப்பாக, நாலா சோபாராவில் உள்ள விநாயக பராமரிப்பு மையத்தில்தான் அதிகப்படியான கரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இது குறித்து பேசிய நலா சோபாரா எம்எல்ஏ க்ஷிதிஜ் தாக்கூர், "இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும் உதவுமாறு வேண்டுகோள்விடுக்கிறேன். வசாய் தாலுகாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளது உண்மைதான்.
இங்கிருக்கும் ஆக்சிஜன் சப்ளை, மூன்று மணிநேரங்களுக்கு மட்டுமே இயங்கக்கூடியது. ஏற்கனவே, இத்தகையைப் பற்றாக்குறையால் உயிர்கள் பறிபோய்விட்டன. இவ்விவகாரத்தில் தீவிர ஆய்வு மேற்கொண்டு, உடனடியாகப் போதுமான ஆக்ஸிஜன் விநியோகம் செய்யுங்கள். உயிரிழப்பைத் தடுத்திட உதவி செய்யுங்கள்" எனத் தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆளும் கட்சிக்கு எதிராகக் கண்டனங்களை எழுப்பிவருகின்றனர். மருத்துவமனையில் முறையான படுக்கை வசதி, ஆக்சிஜன் விநியோகம் உள்ளதா என்பதைக் கண்காணிக்க வலியுறுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார், பாஜக எம்பி சரோஜுக்கு கரோனா!