மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம், உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்து, பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டது. கடந்த ஜூன் 30ஆம் தேதி முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேயும், துணை முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும் பதவி ஏற்றனர்.
இந்த நிலையில் புதிய அரசு பொறுப்பேற்று 40 நாட்களுக்கு பிறகு, மகாராஷ்டிரா அமைச்சரவை முதல்முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக 18 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அமைச்சர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்ற 18 அமைச்சர்களில் 9 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள், 9 பேர் சிவசேனாவைச் சேர்ந்தவர்கள். விரைவில் அடுத்த சுற்று விரிவாக்கம் நடைபெறும் என தெரிகிறது.