மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் (ஜனவரி 15) ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் சந்தேகமான முறையில் இறந்து கிடந்தன. பறவை காய்ச்சலால் இறந்திருக்கலாம் என சந்தேகித்த சுகாதார துறையினர், அவற்றின் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இது குறித்து பேசிய அம்மாநில சுகாதார ஊழியர் ஒருவர், "மகாராஷ்டிராவில் இதுவரை புனே, அகமத்நகர், பர்பானி, லாதூர், உஸ்மானாபாத், பீட், நாந்தேட், சோலாப்பூர், ராய்காட் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழக்கின்றன. அவற்றின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை, 22 மாவட்டங்களில் பறவை அதிகளவில் உயிரிழப்பது பதிவாகியுள்ளது" எனத் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சல் பிரதேசம், ஹரியானா, குஜராத் மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.