போபால்: உலகிலேயே மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் மத்திய பிரதேசத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் அணையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் 2022-23ஆம் ஆண்டுக்குள் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திகள் துறை முதன்மை செயலாளர் சஞ்சய் துபே கூறுகையில், "இந்த மிதக்கும் சூரிய மின் நிலையம் நர்மதா ஆற்றின் குறுக்கே உள்ள ஓம்காரேஷ்வர் அணையில் அமைக்கப்பட்டுவருகிறது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ. 3,000 கோடியாகும். முதலில் 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
இந்த அளவு தேவைக்கு ஏற்ப அதிகரிக்கப்படும். அடுத்த கட்டமாக 300 மெகாவாட்டிற்கான டெண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அந்த வகையில் 2022-23 ஆம் ஆண்டுக்குள் 600 மெகாவாட் உற்பத்தி செய்யப்படும்.
ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் ஹைடல், தெர்மல் முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. இப்போது சோலார் முறையிலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. அந்த வகையில், மூன்று வகைகளிலும் சுமார் 4,000 மெகாவாட் மின்சாரம் ஒரு ஆண்டுக்கு உற்பத்தி செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தனி வீட்டுக்கு ரூ.3,419 கோடி மின் கட்டணம் - அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!