மத்தியப்பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (நவ.17) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு இன்று மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்கான பாதுகாப்புப் பணிகளை மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர் செய்துள்ளார். இன்று பதிவாகும் வாக்குகள், டிசம்பர் 3 அன்று எண்ணப்பட உள்ளது. இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 11.13 சதவீத வாக்குகள் பதிவாகியது. இதனையடுத்து, காலை 11 மணி நிலவரப்படி 27.62 சதவீத வாக்குகள் பதிவாகியது. இந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 71.11 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
இதனிடையே, அம்மாநிலத்தின் திமானி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மிர்கன் (147) மற்றும் மொரேனா (148) ஆகிய வாக்குச்சாவடிகள் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் ஒருவர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நேரடி மோதல் நிகழ்கிறது. முக்கியமாக, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் புத்னி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் அவரை எதிர்த்து, 2008ஆம் ஆண்டு ஒளிபரப்பான ராமயணம் 2 என்ற தொலைக்காட்சித் தொடரில் அனுமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 40 வயது கொண்ட நடிகர் விக்ரம் மாஸ்டல் காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் உள்ளார்.
மேலும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத், சிந்தவாரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, அதே தொகுதியின் பாஜகவின் யுவா மோர்ச்சா தலைவர் விவேக் புண்டி சாஹூ போட்டியிடுகிறார். முன்னதாக நடைபெற்ற 2019 சட்டமன்ற இடைத் தேர்தலில், பாஜகவின் சாஹூவை 25 ஆயிரத்து 837 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் கமல் நாத் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விமான நிலையத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த ஏர் இந்தியா விமானி! இது முதல் தடவையல்ல?