உஜ்ஜைன்: மத்தியப் பிரதேசத்தில் உஜ்ஜைன் மாவட்டத்தில் தயாராம் பரோட்(60) என்ற விவசாயி தனது பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று(பிப்.27) அவரது உறவினர் தீபக் செல்போனில் தொடர்பு கொண்டபோது, செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகமடைந்த தீபக், தயாராமின் பண்ணை வீட்டிற்குச் சென்று பார்த்தார். வீட்டில் தயாராம் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்ததாகத் தெரிகிறது. அதேபோல், அவரது செல்போன் மற்றும் சார்ஜ் போட்டிருந்த ஸ்விட்ச் போர்டும் சேதமடைந்திருந்தது. இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தயாராமின் முகம், கழுத்து, மார்பு பகுதிகளில் காயம் இருந்ததாகவும், செல்போன் மற்றும் சார்ஜ் கேபிள் கருகியிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். அவரது வீட்டில் வெடிமருந்து அல்லது வெடிபொருட்கள் ஏதும் இல்லை, அதனால் அவர் செல்போன் வெடித்ததில் இறந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் கடந்த ஆண்டு கர்நாடகாவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது செல்போன் வெடித்து இளைஞர் படுகாயமடைந்தார்.