சமீபத்தில் உத்தரப் பிரதேசம் மாநிலம், லக்னோவில் ஆவாத் கிராசிங்கில், கார் ஓட்டுநரை இளம்பெண் ஒருவர் சரமாரியாகத் தாக்கும் காணொலி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கார் தன் மீது மோதி விட்டதாகக் கூறி ஓட்டுநரை அப்பெண் தாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் ஓட்டுநர் அப்பெண்ணை இடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
#ArrestLucknowGirl
இதனால், கார் ஓட்டுநர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து, தாக்குதல் நடத்திய இளம்பெண்ணை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை வலியுறுத்தும் விதமாக கடந்த சில நாள்களாக #ArrestLucknowGirl என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது.
இதுதொடர்பாக காவல் துறையினர் அப்பெண் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். ஆனால், அதில் அப்பெண்ணின் வாக்குமூலம் இடம்பெறவில்லை.
தற்காப்புக்காகவே அடித்தேன்
இதையடுத்து, நேற்று(ஆகஸ்ட்.8) சம்பந்தப்பட்ட பெண், தனது தந்தையுடன் பந்த்ரா காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது, அவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கார் ஓட்டுநரை சுய பாதுகாப்பாக அடித்ததாக தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அப்பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் சேகரிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்து இளம்பெண் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தாலும், இதுவரை கைது செய்யாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
கைது செய்யல
இதுதொடர்பாக பேசிய கிருஷ்ணாநகர் உதவி காவல் ஆணையர் சுதந்திரன் குமார் சிங், "கேப் ஓட்டுநரை தாக்கிய பெண்ணின் வாக்குமூலம், ஆகஸ்ட் 8 ஆம் தேதி பெறப்பட்டது.
அதன்பிறகே, அவர் மீது குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இளம்பெண் மீது தாக்குதல் நடத்தியதாக தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த பிரிவில், ஏழு ஆண்டுகளுக்கு குறைவான அளவில் தண்டனை கிடைக்கும் என்பதால், உடனடியாக அப்பெண்ணை கைது செய்யவில்லை.
அவர் ஏற்கனவே பைக் ரைடரை அடித்தது, இல்லத்தின் கலர் பிடிக்கவில்லை என பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டையிட்டது போன்ற காணொலி வெளிவந்துள்ளது. மனநிலை பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பெற்று வருகிறார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புனே: நான்காம் மாடி ஜன்னலில் தொங்கிய சிறுமி மீட்பு