லக்னோ: இதுகுறித்து மாநில கால்நடை பராமரிப்புத் துறை கூற்றுப்படி, லக்னோவின் ஃபசுல்லகஞ்ச் பகுதியில் நேற்று (ஜூலை 20) 140 பன்றிகள் திடீரென உயிரிழந்தன. இந்த தகவலையறிந்த கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்து, பன்றிகளின் ரத்த மாதிரிகளை போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்குகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த மாதிரிகளின் பரிசோதனை முடிவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியின் குழுக்களும் சம்பவயிடத்திற்கு விரைந்து ஆய்வு பணிகளில் ஈடுபட்டன. அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கின. அந்த வகையில், யாருக்காவது காய்ச்சல், மூச்சுத் திணறல் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இரவில் தூங்கும் போது கொசுவலைகளை பயன்படுத்த வேண்டும்.
குறிப்பாக பன்றிகள் வளர்க்கப்படும் பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் மேற்கூறியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதேபோல பன்றிகளை வளர்ப்போர் உடனடியாக கால்நடை பராமரிப்புத் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அஸ்ஸாம், மிசோரம், திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலால் 40,000 பன்றிகள் உயிரிழந்துள்ளன.
இதையும் படிங்க: வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல்: அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவு!