இரு மனங்களின் இணைப்பு பாலமாக திகழும் காதலர் தினத்தில், காதலர்கள் ஒருவருக்கொருவர்க் காதலின் ஆழத்தைப் பரிசுகள் மூலம் வெளிப்படுத்துவார்கள். சிறிய கிரீட்டிங் கார்டில் வழங்குவதில் மலரும் காதல், தற்போது டெலஸ்கோப் மூலம் பார்க்கும் நட்சத்திரத்தை வாங்கும் வரைக்கும் செல்லும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆம், காதலிக்காக நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கியது மட்டுமின்றி ஒரு நட்சத்திரத்தை வாங்கி அதற்குக் காதலியின் பெயரையும் சூட்டியுள்ளார் இந்தூரைச் சேர்ந்த காதலர் ஒருவர்.
நிலாவில் இன்ப சுற்றுலா செல்வேன்
இந்தூரை சேர்ந்த பலாஷ், தற்போது துபாயில் ஃப்ரீ லாஞ்சிங் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது வருங்கால மனைவி ஆஷனா மந்தன் ஹைதராபாத்தில் வசிக்கிறார். இந்நிலையில் காதலர் தினத்தில், அவரை சர்ப்ரைஸ் செய்ய நினைத்த பலாஷ், சர்வதேச லூனார் லேண்ட் நிறுவனம் மூலம் ஒரு ஏக்கர் நிலத்தை நிலாவில் வாங்கியுள்ளார்.
இதுமட்டுமின்றி, நட்சத்திரத்தை வாங்கி, அதற்கு ஆஷனா மந்தன் எனப் பெயர் சூட்டியுள்ளார். தற்போது, விஞ்ஞானம் அபரிமிதமான வளர்ச்சியை கண்டு வருவதால், ஒரு நாள் நிச்சயம் மனைவியுடன் நிலாவில் உள்ள தனது நிலத்தில் கால் பதிப்பேன் எனக் கூறுகிறார்.
நிலாவில் இடத்தை வாங்கியுள்ள பாலிவுட் ஸ்டார்ஸ்
ஷாருக்கான், சுஷந்த் சிங் ராஜ்புத் போன்ற பாலிவுட் நடிகர்களும் நிலவில் நிலம் வாங்கியிருக்கின்றனர். சுஷந்த் நேரடியாக தாமே நிலம் வாங்கியிருக்கிறார். ஷாருக்கானுக்கு வேறொருவர் இந்த நிலத்தைப் பரிசாக வழங்கியிருக்கிறார். அதேபோல், கடந்தாண்டு ராஜஸ்தானில் மனைவிக்கு பரிசாக மூன்று ஏக்கர் நிலத்தைக் கணவர் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உண்மையாகவே நிலாவில் இடம் வாங்க முடியுமா ?
1967ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, நிலாவில் நிலம் வாங்குவது அல்லது விற்பது சட்டவிரோதமானது. இதனை இந்தியா உட்பட மொத்தம் 104 நாடுகள் ஒத்துக்கொண்டன. ஏராளமான ஆன்லைன் வலைதளங்கள் நிலாவில் உள்ள இடத்தை விற்பனை செய்கின்றன. அதற்கு, சான்றிதழ் வழங்கியிருந்தாலும், பூமிக்கு வெளியில் உள்ள இடத்தை யாராலும் உரிமை கோர முடியாது என்றுதான் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: காதலர் தினத்தில் காதல் மனைவிக்கு சிறுநீரக தானம்; குஜராத் கணவரின் நெகிழ்ச்சி செயல்