டெல்லி: மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தரப்புக்கும், பாஜகவுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆட்சியை தக்க வைக்க மம்தா பானர்ஜியும், ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் அரசியல் சதுரங்க காய்களை நகர்த்திவருகின்றன.
இந்நிலையில் மம்தா பானர்ஜியை தோற்கடிப்பேன் என பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். இவரை எதிர்த்துதான் நந்திகிராம் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.
இதற்கிடையில் மேற்கு வங்கத்தில் ஒவ்வொரு மூலை முடுக்கெங்கிலும் தாமரை மலரும் என்று மத்திய இணையமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி வெற்றி பெறுவார். மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கெங்கிலும் தாமரை மலரும்” என்றார்.
மம்தா பானர்ஜி தாக்கப்பட்ட விவகாரம் குறித்து கூறுகையில், “இது இயற்கைதான். மம்தா பானர்ஜி தோல்வியின் விளிம்பில் உள்ளார். அக்கட்சி தலைவர்கள் ஒவ்வொருவராக போட்டியிலிருந்து வெளியேறுகின்றனர். அரசியலும் முடிவுக்கு வருகிறது” என்றார்.
தொடர்ந்து ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த தாகூர், “நாட்டு மக்கள் பல ஆண்டுகளாக ஆள அவர்களுக்கு வாய்ப்பளித்தனர். தற்போது அவர்களின் சுயநம்பிக்கை முடிவுக்கு வருகிறது. ஆகையால் வட இந்தியர்களை ராகுல் முட்டாள் என்கிறார். இதுவே அங்கு காங்கிரஸ் தோல்வியை தழுவ காரணம்” என்றார்.
நந்திகிராம் தொகுதியில் தேர்தல் பரப்புரையின்போது முதலமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டார். அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று பரப்புரையின்போது அவரின் கார் கதவை பிடித்து தள்ளியது. இதில் மம்தா பானர்ஜியின் காலில் காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி மேற்கு வங்கத்தில் நடைபெற்றுவருகிறது. இங்கு 2021 சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: ராகுல் காந்தி கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை- கைலாஷ் விஜய்வர்ஜியா!