ஹைதராபாத்: திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் அண்மையில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. மேகாலயாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், பாஜக உள்ளிட்ட பிற கட்சிகளுடன் இணைந்து தேசிய மக்கள் கட்சி மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.
இந்துத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கும் பாஜக, பழங்குடிகள் மற்றும் கிறிஸ்வர்கள் அதிகம் வாழும் வட கிழக்கு மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ளது என்பது கவனிக்க வேண்டிய விஷயம். பாஜக தனது அரசியல் உத்திகளைப் தெளிவாக பயன்படுத்தி வடகிழக்கு மாநிலங்களைக் கைப்பற்றியுள்ளது.
பாஜகவைப் பொறுத்தவரை இது ஒரு இரவில் நடந்தது அல்ல, பல ஆண்டு கால கடுமையான உழைப்பு. பிரிவினைவாதம், கிளர்ச்சிகள் என காணப்படும் இப்பகுதியில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு பாஜக தனது வேரை ஊன்றியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் மெத்தனமாக இருந்ததும் பாஜகவிற்கு சாதகமாக அமைந்துவிட்டது.
தேர்தல் நேரங்களில் காங்கிரஸ் வட கிழக்கில் அமைதி நிலைநாட்டுவதாகவும், அங்குள்ள கிளர்ச்சிகளைப் பற்றியும் பிரச்சாரம் செய்யும். மாறாக பாஜக, மத ரீதியான பிரச்சாரங்களை விடுத்து, வட கிழக்கில் உள்ள மக்களின் தேவைகளையும், அவர்களுக்கான எதிர்கால திட்டங்கள் குறித்தும் அதிகம் பேச ஆரம்பித்தது. மேலும், அரசியல் ரீதியாக பிராந்திய கட்சிகளுடன் தயங்காமல் கூட்டணி வைத்ததும் பாஜகவின் வெற்றிக்கு முக்கியமாக காரணம் ஆகும்.
வட கிழக்கில் 2014-க்கு முன்பு பாஜகவுக்கு பெரிய அடித்தளம் ஏதும் இல்லை. கடந்த கால தோல்வியை உன்னிப்பாக கவனித்த பாஜக, 2014-ல் ஆட்சிக்கு வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வடகிழக்கில் வேலை செய்ய ஆரம்பித்தது. தேர்தல் பொறுப்பாளர்களாக கிறிஸ்தவர்களை நியமித்தது, தேவாலயங்களை சீரமைத்தது உள்ளிட்ட பல வேலைகளை செய்தது.
அதேபோல் காங்கிரசின் அடித்தளத்தையும் சரித்தது. தேர்தல் காலங்களில் பிரதமர் மோடி உள்பட பாஜக அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் அனைவரும் வடகிழக்கு பிராந்தியங்களுக்கு பயணம் செய்தனர். அனைத்து கோணங்களிலும் மிகவும் கவனமாக செயல்பட்டது பாஜக. அதற்கேற்றார்போல் நீண்ட காலத்திற்குப் பிறகு வெற்றியையும் பெற்றுவிட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தென் மாநிலங்களில் பாஜக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது. ஆனால், தென் மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. பலம் வாய்ந்த பிராந்தியக் கட்சிகள் இருக்கும் தென் மாநிலங்களில் கால்பதிக்க முயற்சிக்கும்போது, சவால்கள் மிகவும் அதிகமாகவே இருக்கும். தற்போது கேரளாவில் பாஜக தீவிர கவனம் செலுத்துவதாக தெரிகிறது.
கேரளாவில் கடந்த சட்டமன்ற தேர்தலில் மெட்ரோமேன் ஶ்ரீதரனை களத்தில் இறக்கியது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு பயன் இல்லை. அதேநேரம் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. இந்த சூழலில் பாஜக கேரளாவை கைப்பற்றுமா? என்பது கேரள காங்கிரஸும், ஆளும் இடதுசாரி அரசும் ஏற்படுத்தித் தரும் ஓட்டைகளைப் பொறுத்ததே. இடதுசாரிகள் சற்று தடுமாறினால் கூட, பாஜக எளிதாக கேரளாவை கைப்பற்றும் எனக் கூறப்படுகிறது.