ராய்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சென்ற மார்ச் 15 அன்று ராய்கர் நீதிமன்றம் 10 நபர்களுக்கு ஆக்கிரமிப்பு வழக்கிற்காக சம்மன் அனுப்பியுள்ளது. இதில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சிவ ஆலயத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ராய்கர் தாலுகா அலுவலகத்தின் தாசில்தார் நிலம் மற்றும் குளம் உடைமை தொடர்பாக 10 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வார்டு எண் 25இல் வசிக்கும் சுதா ராஜ்வாடே என்பவர், பிலாஸ்பூர் உயர் நீதிமன்றத்தில், சிவன் கோயில் உட்பட 16 பேர் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக குற்றம்சாட்டி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரிக்குமாறு மாநில அரசு மற்றும் தாசில்தார் அலுவலகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக நீதிமன்றம் 10 பேருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த விசாரணையில் கோயில் அனைவருக்கும் பொதுவானது என்பதால் சிவன் பெயரில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனால் சம்மன் பெற்ற மற்றவர்கள் சிவன் சிலையை சைக்கிள் ரிக்ஷாவில் வைத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த எடுத்துச்சென்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் சிவனுக்கான வழக்கு 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சத்தீஸ்கர் நில வருவாய் சட்டம் 1959 பிரிவு 248இன் கீழ் இந்த பணி அங்கீகரிக்கப்படாதது என்று நோட்டீஸில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்காக ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதித்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:577 மீனவர்கள் பாகிஸ்தானின் பிடியில் இருப்பதாக மக்களவையில் தகவல்!