நாட்டின் சுகாதாரத் துறையில் 80 விழுக்காட்டுப் பங்கை வகிக்கும் மருத்துவமனைத் தொழில் ஒவ்வொரு ஆண்டும் 16 விழுக்காடு முதல் 17 விழுக்காடு வரையிலான வளர்ச்சியைக் காண்கிறது என்று நிதி ஆயோக்கின் அறிக்கை தெரிவித்திருக்கிறது.
இன்னும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவமனைத் தொழில் துறை 13,200 கோடி டாலர் மதிப்புகொண்ட உன்னத நிலையை எட்டிவிடும் என்றும் அந்த அறிக்கைச் சொல்கிறது. மருந்துத் துறையின் வளர்ச்சியையும், மருத்துவ உபகரணத் துறையின் வளர்ச்சியையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், ஒட்டுமொத்த மருத்துவச் சேவைத் துறை அடுத்த ஆண்டிற்குள் ரூபாய் 27 லட்ச கோடி மதிப்புள்ள அந்தஸ்தை அடைந்துவிடும் என்று நிதி ஆயோக் அறிவித்திருக்கிறது.
மேலும் இந்தத் துறை பெரிய அளவில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் என்ற ஓர் ஆக்கபூர்வமான சித்திரத்தை நிதி ஆயோக் முன்வைக்கிறது. சுகாதாரக் காப்பீடு, சுகாதாரச் சுற்றுலா, தொலைபேசி மருத்துவம், தொழில்நுட்ப அடிப்படையிலான மருத்துவச் சேவைகள், அவற்றோடு தொடர்புடைய மற்றத் துறைகள் எல்லாம் 2017-2022 காலக்கட்டத்தில் மேலும் 27 லட்ச வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வண்ணம் ஒன்றுபோல வளரும் என்றும் அது கூறியிருக்கிறது.
நாட்டின் மருத்துவமனைப் படுக்கைகளில் 65 விழுக்காடு கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருக்கின்றன என்று சொல்லும் நிதி ஆயோக், மிச்சமிருக்கும் மாநிலங்களில் மருத்துவமனைப் படுக்கைகளின் எண்ணிக்கையைக் குறைந்தபட்சம் 30 விழுக்காடு உயர்த்துவதற்கு வாய்ப்பு உள்ளது என்கிறது.
மருத்துவமனைச் செலவுகளுக்காக கொள்ளை கொள்ளையாய்ப் பணத்தைச் இறைத்துவிட்டு ஆண்டுதோறும் வறுமைக்குள் விழும் ஆறுகோடி மக்களைக் கொண்டது நமது தேசம். நோய்களில் 90 விழுக்காடு அடையாளம் கண்டு அவற்றை ஆரம்பச் சுகாதார நிலையங்களிலேயே குணமாக்கிவிட முடியும் என்று சொன்ன உலக வங்கியின் கருத்தோட்டத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால், ஐயகோ! அந்தக் கருத்து எப்போதும் நிராகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதன் விளைவாக, ஆரோக்கியம், சுகாதாரம் என்ற சேவைகள் எல்லாம் பணக்காரர்களின் சிறப்புரிமையாகிச் சீரழிந்துவிட்டன.
கோவிட்-19 போன்ற கொடுமையான தீநுண்மி நோய்கள் வீரியத்துடன் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினையான வேளையில், அரசாங்கங்கள் பாமர மனிதனுக்கும் சுகாதாரப் பாதுகாப்பு அளித்தே தீர வேண்டும். ஆனால் சோதனையும், வேதனையும் மிக்க இந்தக் காலக்கட்டத்தில் ஆள்வோர்களின் மனப்பாங்கை நினைத்தால் குலைநடுங்குகிறது.
மனித வளங்களைத் திறனுடன் பயன்படுத்துவது என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியில் அதிமுக்கியமான அம்சம் ஆகும். தனிமனிதர்களை, முன்னேறிக் கொண்டிருக்கிற, பிரயோஜனமான ஆக்கப்பூர்வமான செல்வங்களாக, வளங்களாகப் பேணி வளர்த்தெடுக்கக் கல்வி, சுகாதாரம் ஆகிய இரண்டு காரணிகள் மிக மிக அவசியம்.
தாராளமயமாக்கலின் ஜன்னல்கள் எத்தனைதான் திறந்துவிடப்பட்டாலும், கல்வியும், சுகாதாரம் பேணுதலும், பொதுத் துறையிலேதான் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நோபல் பரிசு பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் வலியுறுத்தி உள்ளார். ஆனால் கெடுவாய்ப்பாக, விவேகமான அவரது சொற்கள் செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போய்விட்டன.
உலகிலேயே ஆகச்சிறந்த சுகாதாரம் பேணும் அமைப்புகள் கனடா, டென்மார்க், ஸ்வீடன், நார்வே, ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் செழித்தோங்கி வளர்கின்றன. எனினும், விரைவில் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கப் போகும் இந்தியா இன்னும் பரிதாபகரமான நிலையில்தான் இருக்கிறது; இங்கேதான் அதிகப் பணம் கொடுத்து சுகாதார வசதிகளைப் பயன்படுத்த வேண்டி இருக்கிறது.
தேசத்தின் இரண்டாம்படி, மூன்றாம்படி நகரங்களில் தனியார் சுகாதாரத் துறைக்கு ரூபாய் 2.3 லட்சம் கோடி மதிப்புள்ள 600 வாய்ப்புகள் காத்துக்கொண்டிருக்கின்றன என்று நிதி ஆயோக் சொல்கிறது.
இந்த வகையில் 7.3 கோடி மக்கள் நடுத்தர வகுப்பிற்கு உயர்ந்து செல்லக்கூடிய சாத்தியமான வளர்ச்சி என்பது ஓர் ஆக்கப்பூர்வமான காரணி என்று அது சொல்கிறது. அதிக கொழுப்பு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன் ஆகிய வாழ்க்கை முறை நோய்களோடு அதிகரிக்கும் மதுவருந்தும் பழக்கம் மருத்துவச் சேவைகளுக்கான தேவையை மேலும் அதிகமாக்கும் என்று நிதி ஆயோக் கருத்து சொல்லி இருக்கிறது.
ஒருவனின் சாபத்தை மற்றொருவன் தனது வரமாக மாற்றிக் கொள்ளும் முயற்சியைப் போல, நிதி ஆயோக் மக்களின் கஷ்டத்தில், துன்பத்தில் நல்வாய்ப்புகளைத் தரிசிக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் துயரத்தில் உழலும்போது பொதுத்துறை மூலம் மருத்துவ, சுகாதார சேவைகளை விரிவாக்கம் செய்வதுதான் சரியான எதிர்வினையாக இருக்க முடியும். மாறாக, மக்களின் துன்பம் ஒரு நல்வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. என்ன விதமான தீவினையான மனப்போக்கு இது?
சுகாதாரத்தின் மீதான மக்களின் உரிமை என்பது நியாயமான செலவுக்குள்பட்ட வைத்தியத்தையும் உள்ளடக்கியதுதான் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. அந்த வகையில் சுகாதாரம் பேணும் அரசின் கொள்கையும் கட்டமைக்கப்பட வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையத் துறைக்குப் புதிய ரத்தம் பாய்ச்சுவது அரசின் கடமை. மருத்துவ உபகரணத் துறையிலும், மருந்துத் துறையிலும் வெளிநாட்டு முதலீடுகளை நாடுகின்ற நிலைக்கு நாடு தள்ளப்படுகின்ற கையறுநிலைச் சூழ்நிலையைத் தவிர்க்கும் ஆற்றல் கொண்ட நடவடிக்கைகளை, திட்டங்களை அரசாங்கம் எடுத்தே ஆக வேண்டும்
இதையும் படிங்க: அமித் ஷா மீது தேர்தல் ஆணையத்தில் புகார் - நாராயணசாமி