கேரளா: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் 14ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தின் லேண்டர், திட்டமிட்டபடி கடந்த 23ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. விக்ரம் லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவரும் வெற்றிகரமாக வெளியே வந்து ஆய்வு செய்து வருகிறது. சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்தது இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஞ்ஞானிகளுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திரமோடி நேற்று(ஆகஸ்ட் 27) பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு நேரில் சென்று விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து கூறினார். அப்போது விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய புள்ளி 'சிவசக்தி' என்று அழைக்கப்படும் என்றும், சந்திரயான்-2 லேண்டர் விழுந்து நொறுங்கிய இடம் 'திரங்கா' என்று அழைக்கப்படும் என்றும் அறிவித்தார். அதேபோல், லேண்டரை தரையிறங்கிய நாளான ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும் என்றும் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, சிவசக்தி புள்ளியைச் சுற்றி ரோவர் ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ வீடியோவும் வெளியிட்டிருந்தது. அதில், லேண்டரில் இருந்து ரோவர் தரையிறங்கி சில மீட்டர் தூரம் சென்று ஆய்வு செய்வது பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சோமநாத், "சந்திரயான்-3 திட்டத்தின் பெரும்பாலான நோக்கங்கள் நிறைவேறி வருகின்றன. இது இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருக்கும். அடுத்த இரண்டு வாரங்களுக்கு சந்திரயான்-3 திட்டத்திலிருந்து ஏராளமான தரவுகளை சேகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், அடுத்த 13-14 நாட்களை நாங்கள் மிகவும் உற்சாகமாக பார்க்கிறோம்" என்று கூறினார்.
முன்னதாக நேற்று பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு வீடியோ வெளியிட்டிருந்த இஸ்ரோ தலைவர் சோமநாத், "சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது மட்டுமல்ல, முழு திட்டமுமே வெற்றிகரமாக இருந்தது. இந்த திட்டத்தில் ஒட்டுமொத்த தேசமும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆதரவாக இருக்கிறது. இந்தியா தற்போது சந்திரன், செவ்வாய் அல்லது வெள்ளி கோள்களுக்கு பயணம் மேற்கொள்ளும் திறன் கொண்டுள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள் ஏற்கனவே ஸ்ரீஹரிகோட்டாவை வந்தடைந்துள்ளது" என்றார்.