பெங்களூரு: ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.வின் மகன் பிரசாந்த் மடலை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க கர்நாடக சிறப்பு லோக் ஆயுக்தா நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரசாந்த் மடல் தொடர்புடைய இடங்களில் ரெய்டுகள் நிலுவையில் உள்ளதால், அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக லோக் ஆயுக்தா அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதற்கட்ட விசாரணை முடிந்த பிறகு அதிகாரிகள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற 4 பேரும் நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் பாஜக எம்.எல்.ஏ. மடல் விருபாக்சப்பாவை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
பிரசாந்த் மற்றும் அவரது உதவியாளர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 7 கோடியே 62 லட்ச ரூபாய் பணத்தை லோக் ஆயுக்தா அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜக எம்.எல்.ஏ. மடல் விருபாக்சப்பாவின் மகனான பிரசாந்த் மடல் பெங்களூரு, நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் தலைமை கணக்காளராகப் பணிபுரிந்து வந்தார்.
லஞ்சம் வாங்கியது தொடர்பாக பிரசாந்த் உள்பட 5 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். பிரசாந்தின் உறவினர் சித்தேஷ், கணக்காளர் சுரேந்திரா, நிக்கோலஸ் மற்றும் கங்காதர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளனர். இதில் நிக்கோலஸ் மற்றும் கங்காதர் ஆகியோர் 40 லட்ச ரூபாய் லஞ்சப் பணத்தை கொடுக்க வந்ததாக கூறப்படுகிறது.
லஞ்சப் புகார் தொடர்பாக சன்னகிரி தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வான மடல் விருபாக்சப்பாவின் வீடு மற்றும் அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். பெங்களூரு சஞ்சய்நகர் பகுதியில் உள்ள ஆடம்பர மாளிகை, மற்றும் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
மேலும் பிரசாந்த் மடல் மற்றும் அவரது தந்தை தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை வேட்டை நடத்தி வருகின்றனர். 40 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் புகாரில், லோக் ஆயுக்தா அதிகாரிகள் பிரசாந்த் மடல் உள்ளிட்டோரை கையும் களவுமாகப் பிடித்தனர். கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு மூலப்பொருட்கள் வழங்குவதற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த டெண்டர் தொடர்பாக பிரசாந்த் 80 லட்ச ரூபாய் லஞ்சமாக கேட்டதாகவும், அதில் 40 லட்ச ரூபாய் லஞ்சப் பணத்தை அலுவலகத்தில் வைத்து வாங்கும்போது பிடிபட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மடல் விருபாக்சப்பா என்பதால் அவரிடமும் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: ஐந்து மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ், பாஜக தலா 3 இடங்களில் வெற்றி