டெல்லி : நாடாளுமன்றக் கூட்டத்தை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டம் தொடங்கியது முதலே மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முழுமையாக நடத்த முடியாத சூழல் நிலவி வருவதாக கூறப்பட்டு உள்ளது.
மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என ஏறத்தாழ 26 எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தை அமைதியாக நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மக்களவை சபாநாயகர் ஒன் பிர்லா ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் பிற்பகல் 12.30 மணி அளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளிப்பார் என்றும் அது குறித்து விவாதம் நடத்தப்படும் என்றும் மத்திய அரசு கொடுத்த வாய்ப்பை எதிர்க்கட்சிகள் நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதற்கு பதிலாக மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அது தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் பிடிவாதம் பிடிப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர்களிடயே நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவையில் கூச்சல் மற்றும் அமளியில் ஈடுபடுவதால் எதுவும் நடந்து விடாது என்றும், அமைதியான முறையில் அவையை நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டதாக கூறப்பட்டு உள்ளது.
மேலும், கேள்வி நேரத்தைத் தொடர எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வேண்டும் என்றும், ஜனநாயகத்தில் முக்கியமான நடவடிக்கை என்பதால் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்களிடம் சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : நம்பிக்கையில்லா தீர்மானம்... எதிர்க்கட்சிகள் திட்டம்! பாஜக எம்.பிக்களை கடிந்து கொண்ட பியூஷ் கோயல்! எதுக்கு தெரியுமா?