டெல்லி: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கடந்த மே மாதம் முதல் வாரத்தில் துவங்கிய வன்முறைச் சம்பவங்கள், இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவம், நாடெங்கும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த வன்முறை சம்பவங்களில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை மாதம் 20ஆம்தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. அதற்கு பிரதமர் தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள், மத்திய அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதன் மீதான விவாதத்திற்கு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஒப்புதல் வழங்கி இருந்தார்.
இதனை அடுத்து, மத்திய அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் ஆகஸ்ட் 8ஆம் தேதி துவங்கும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக, ஆகஸ்ட் 10ஆம் தேதி, பிரதமர் மோடி பதில் அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நாடாளுமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 8ஆம் தேதி) நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் துவங்குகிறது. விவாதத்திற்கு மொத்தம் 12 மணி நேரத்தை ஒதுக்கி அலுவல் ஆய்வுக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், விவாதத்தின்போது மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் எழுப்புவதற்கு எதிர்கட்சிகள் தயாராகி உள்ளன.
விவாதத்தை துவக்கும் ராகுல்: உச்சநீதிமன்றம் ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உள்ள நிலையில், அவருக்கு எம்.பி. பதவியை, திரும்ப வழங்குவதாக, மக்களவை செயலகம்,ஆகஸ்ட் 7ஆம் தேதி அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. இதனை தொடர்ந்து,ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெற்ற மக்களவை அலுவலில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
அதன்படி, இன்று மக்களவையில் விவாதம் தொடங்க இருக்கிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி விவாதத்தை தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து கவுரவ் கோகாய், மணிஷ் திவாரி, தீபக் பாய்ஜ் ஆகியோர் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எதிர்கட்சிகளின் விவாதத்திற்கு மத்திய அரசு சார்பில் ஆகஸ்ட் 10ஆம் தேதி பதில் அளிக்கப்பட உள்ளது. பொதுவாக, எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதங்களுக்கு பிரதமர் பதில் அளிப்பது மரபாக உள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி 10ஆம்தேதி பதில் அளித்து பேச உள்ளார்.
இதையும் படிங்க: Rajya Sabha: டெல்லி நிர்வாக திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!