டெல்லி : எதிரக்கட்சிகளின் தொடர் அமளியை அடுத்து மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நமபிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட். 8) நடைபெற உள்ளது.
காலை 11 மணிக்கு அவை தொடங்கிய நிலையில், பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேயின் கருத்துகளின் ஒரு பகுதி மீண்டும் மக்களவை பதிவுகளில் இணைக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார். இதுகுறித்து பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சபையில் எந்தவொரு நடவடிக்கைக்கும் தலைமை தாங்கும் ஒருவர், எந்த முடிவையும் எடுக்க முழு அதிகாரம் பெற்றவர் என்று கூறினார்.
இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சபையை அமைதியான முறையில் நடத்த உறுப்பினர்களுக்கு ஆர்வம் உள்ளதா என கேள்வி எழுப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா, அவையில் கேள்வி நேரம் என்பது மிக முக்கியமானது என்றும், ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதை நடத்த விரும்பவில்லை போலும் என்று கூறினார்.
தொடர்ந்து 12 மணி வரை அவை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். முந்தைய நாள் அவைக் கூட்டத்தில் பேசிய பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, அரசுக்கு எதிரான கருத்துகளை பரப்பி நாட்டில் அமைதியற்ற சூழலை உருவாக்க ஊடகங்கள் வெளிநாடுகளில் இருந்து அதுவும் குறிப்பாக சீனா போன்ற நாடுகளிடம் இருந்து நிதியுதவியை பெற்று வருவதாக தெரிவித்தார்.
நாட்டில் அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்க நியூஸ் கிளிக் ஊடகம், 38 கோடி ரூபாய் வெளிநாடுகளிடம் இருந்து நிதி திரட்டி உள்ளதாக கூறினார். அவர்களுக்கு எப்படி நிதியுதவி கிடைத்தது, அதனால் பயனடைந்தவர்கள் யார் என்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
மேலும் 2005 மற்றும் 2014 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் காங்கிரஸ் கட்சி சீனாவிடமிருந்து பணத்தை பெற்றதாக நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார். இவர்களுக்கு எப்படி பணம் வழங்கப்பட்டது என்பதை நியூயார்க் டைம்ஸ் ஊடகம் வெளியிட்டு உள்ளதாக நிஷிகாந்த் கூறினார்.
இதையடுத்து, அவையில் கூச்சல் குழப்பும் ஏற்பட்டது. நிஷிகாந்த் துபேயின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறாமல் ராகுல் காந்தி அமைதியாக இருந்தார். இதனிடையே காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில் நிஷிகாந்த் துபே ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை கூறியதாகவும், அவரது கருத்துகளை மக்களவை பதிவுகளில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பின்னர் மக்களவை செயலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட மின்னஞ்சல் குறிப்பில், பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேயின் கருத்துகளின் சில பகுதி மக்களவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், மக்களவை இணையதளத்தில் எம்.பி. நிஷிகாந்த் துபேயின் நீக்கப்பட்ட கருத்துகள் பதிவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : No-confidence motion: மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் - ராகுல் துவக்கி வைப்பு!