லிவ்-இன் உறவில் வாழ்ந்துவந்த பஞ்சாப் மாநிலம், பத்திந்தா நகரைச் சேர்ந்த காதலர்கள் இருவர் பாதுகாப்புகோரி தொடர்ந்த மனுவில், லிவ்-இன் உறவு சட்டவிரோதமானது அல்ல என்றும், துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு எனவும் பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு மறுத்த காவல் துறை
பத்திந்தா நகரைச் சேர்ந்த 17 வயது பெண்ணும், 20 வயது ஆணும் மனம் ஒத்து லிவ்-இன் உறவில் வாழ்ந்து வரும் நிலையில், இவர்கள் முன்னதாக பாதுகாப்பு கோரி காவல் துறையை அணுகியபோது அவர்கள் மறுத்துள்ளனர். தொடர்ந்து இந்த ஜோடி, தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றம், இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை எவருக்கும் உண்டு
மேலும், ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு என்றும், ஒருவர் தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் தலையிட்டு விசாரணை மேற்கொள்வது நீதிமன்றத்தின் வேலை அல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் ஆணவக்கொலை
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் ஆணவக் கொலைகள் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த ஜோடிக்கு பாதுகாப்பு வழங்கக் தவறி அவர்கள் ஆணவக்கொலைக்கு பலியானால் அது பெரும் அநீதியாக அமைந்துவிடும் என்றும் பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
லிவ் - இன் சட்டவிரோதம் அல்ல
”லிவ்-இன் உறவு முறையை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியது அல்ல, அதே சமயம் அது சட்டவிரோதமானதும் அல்ல. குடும்ப வன்முறை சட்டத்தில் ’மனைவி’ என்ற வார்த்தை எங்கும் கிடையாது. எனவே எந்த வகையான உறவில் உள்ள பெண்ணும் குடும்ப வன்முறை வழக்கில் ஜீவனாம்சம் பெறலாம்” என்றும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.
திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் ஜோடிக்கு நீதிமன்றம் பாதுகாப்புத் தர மறுத்தால், அரசியலமைப்பு சட்டப்படி குடிமக்களை பாதுகாக்க நீதிமன்றம் தவறியதாக அது அமைந்துவிடும் என்றும் தெரிவித்த நீதிமன்றம், இந்த ஜோடியினர் தொடர்ந்த ரிட் மனு மீது உடனடியாக காவல் துறையினர் முடிவெடுத்து, தேவைப்பட்டால் பாதுகாப்பு வழங்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.