பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் 2023க்கான வாக்குப்பதிவு கடந்த 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த நிலையில், இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரசியல் குடும்பங்களின் வேட்பாளர்கள் இந்த முறையும் அதிக அளவில் களம் காண்கின்றனர்.
அதன்படி, மறைந்த லிங்காயத் சமூக தலைவர் உமேஷ் காட்டியின் குடும்பத்தினரான ரமேஷ் ஜராகிஹோலி கோகாக் தொகுதியிலும், பாலசந்திரா ஜராகிஹோலி அரபவி தொகுதியிலும் போட்டியிட்டுள்ளனர். இந்த இரு தொகுதிகளும் பெலாகவி மாவட்டத்திற்கு உட்பட்டது.
அதேபோல், இதே குடும்பத்தைச் சேர்ந்த ரமேஷ் காட்டிக்கு சிக்கோடி - சதலகா தொகுதியும், அவரது மகன் நிகில் காட்டிக்கு ஹுக்கேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், போக்குவரத்துத் துறை அமைச்சர் பி ஸ்ரீராமுலுவின் மருமகன் சுரேஷ் பாபு, காம்ப்லி தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
மேலும், முன்னாள் முதலமைச்சர் எஸ்.பங்காரப்பாவின் மகன் குமார் பங்காரப்பா, ஷிமோகா மாவட்டத்தில் உள்ள சொராபா தொகுதியின் பாஜக வேட்பாளராகவும், இவரது சகோதரர் மது பங்காரப்பா அதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகவும் களம் இறங்கி உள்ளனர்.
முன்னாள் அமைச்சர் அரவிந்த் லிம்பாவலியின் மைத்துனர் எஸ்.ரகு பாஜக வேட்பாளராக பெங்களூருவின் சிவி ராமன் நகர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். ஆனால், மஹாதேவ்பூர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ள அரவிந்த் லிம்பவாலியின் மனைவியான மஞ்சுளாதான், இந்த தேர்தலில் மஹாதேவ்பூர் தொகுதியில் தனது கணவருக்காக களம் கண்டுள்ளார்.
5 முறை சட்டமன்ற உறுப்பினரும், மூத்த அரசியல் பிரமுகருமான ஷாமனூர் சிவசங்கரப்பா மீண்டும் தேவநாகிரி தெற்கு தொகுதியில் போட்டியிட்டுள்ள அதே நேரத்தில், அவரது மகன் எஸ்.எஸ்.மல்லிகார்ஜூன் தேவநாகிரி வடக்கு தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
அதேபோல், முன்னாள் அமைச்சர் ராமலிங்கா ரெட்டி பெங்களூருவின் பிடிஎம் லேஅவுட் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராகவும், அவரது மகள் செளமியா ரெட்டி ஜெயாநகர் தொகுதியிலும் களத்தில் உள்ளனர். மேலும், முன்னாள் எம்பி கேஹெச் முனியப்பா கோலாரின் தேவநாஹிலி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராகவும், அவரது மகள் ரூப்கலா கேஜிஎப் தொகுதியிலும் களம் காண்கின்றனர்.
அதேபோல், சட்டமன்ற உறுப்பினர் எம்.கிருஷ்ணப்பா விஜயாநகர் தொகுதியிலும், அவரது மகன் ப்ரியகிருஷ்ணா கோவிந்தராஜ் நகர் தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர்களாக களத்தில் குதித்துள்ளனர். ஜேடிஎஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சர் ஹெச்டி குமாரசாமி சன்னாபட்டானா தொகுதியிலும், அவரது மகன் நிகில் குமாரசாமி ராமநகரா தொகுதியிலும் மற்றும் அவரது சகோதரர் ஹெச்எம் ரெவன்னா ஹொலெநரசிபுரா ஹாசன் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
மேலும், எம்எல்ஏ ஜிடி தேவ கவுடா சாமுண்டேஸ்வரி தொகுதியிலும், அவரது மகன் ஹரீஷ் கவுடா ஹுன்சூர் தொகுதியிலும் போட்டியிட்டுள்ளனர். பெல்லாரியின் ரெட்டி குடும்பத்தினர் அதிகளவில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். முக்கியமாக, பெல்லாரி நகர எம்எல்ஏ சோமசேகர் ரெட்டி மற்றும் ஹரப்பனஹள்ளி எம்எல்ஏ காலி கருணாகர ரெட்டி மீண்டும் பாஜக வேட்பாளராக களம் காண்கின்றனர்.
முன்னாள் அமைச்சரும், குடும்பத்தின் அங்கத்தினருமான காலி ஜனார்த்தனா ரெட்டி பாஜகவில் இருந்து விலகி கல்யாண ராஜ்ய பிரகதி கட்சி சார்பில் கங்காவதி தொகுதியிலும், அவரது மனைவி அருணா லட்சுமி பெல்லாரி நகர தொகுதியிலும் போட்டியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: Karnataka Election Result: கர்நாடகாவில் ஆட்சிக் கட்டில் யாருக்கு? - வாக்கு எண்ணிக்கை பணிகள் தீவிரம்!