சாமராஜநகர்(கர்நாடகா): கர்நாடகாவின் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள கேவிஎம் டோடி கிராமத்தில் இன்று (செப்-23) பசுவை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்ற 65 வயது விவசாயி மற்றும் அந்த பசுவை, சிறுத்தை ஒன்று வேட்டையாடிக்கொன்றது. இதில் உயிரிழந்த விவசாயி கோவிந்தய்யா என அடையாளம் காணப்பட்டுள்ளார். கோவிந்தய்யாவின் வலது காலை சிறுத்தைப்புலி ஒன்று துண்டித்து இருந்தது தெரியவந்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் கோவிந்தய்யாவின் உடலை மீட்டனர். இப்பகுதி அடர்ந்த காடுகளுக்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கு சிறுத்தையால் அடிக்கடி தாக்குதல் சம்பவங்கள் நடப்பதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இங்குள்ள பெரும்பாலான மக்கள் விவசாய நிலங்களை நம்பி உள்ளனர். இதனால் வனத்துறையினர் தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்தில் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்ததால் வனத்துறை, காவல் துறை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் என 300க்கும் மேற்பட்டோர் பெலகாவி நகரில் சிறுத்தையைப்பிடிக்க ஒரு மாதத்துக்கும் மேலாக பாதுகாப்புப் பணியில் இருந்தனர். சிறுத்தையைப் பிடிப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டன.
இதனால் 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் சிறுத்தை பிடிபடவில்லை. இறுதியாக சிறுத்தை வனப்பகுதிக்கு சென்றுவிட்டதாக அலுவலர்கள் அறிவித்து பாதுகாப்புப்பணியை கைவிட்டனர்.
இதையும் படிங்க:15 வயது சிறுவனை வேட்டையாடிய புலி - உத்தரபிரதேசத்தில் தொடரும் உயிரிழப்புகள்