டெல்லி: கராச்சி துறைமுகத்தில் இந்திய கடற்படைக் கப்பல்கள் மேற்கொண்ட தீர்க்கமான கடற்படை நடவடிக்கையை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 1971ஆம் ஆண்டு இந்திய-பாக். போரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியைக் குறிப்பிடுகிறது.
இந்நாள் தொடர்பாக ட்வீட் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "நமது வீரம் நிறைந்த கடற்படை வீரர்கள், அவர்களது குடும்பங்களுக்கு கடற்படை நாள் வாழ்த்துகள். இந்திய கடற்படை அச்சமின்றி நமது கடற்கரைகளைப் பாதுகாக்கிறது. மேலும் தேவைப்படும் காலங்களில் மனிதாபிமான உதவிகளையும் செய்கிறது. பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் வளமான கடல் பாரம்பரியத்தையும் இந்நாளில் நினைவில் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பதிவில், இந்திய கப்பற்படை நாள் 2020 நிகழ்வில், இத்தகைய சிறப்பான படையின் அனைத்துப் பணியாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். வீரம், தைரியம், தொழில் திறனைக்கொண்டு கடல் பாதுகாப்பை உறுதிசெய்து நமது கடல்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் இந்தியக் கடற்படை முன்னணியில் உள்ளது. அவர்களுக்கு எனது பாராட்டுகள்" எனத் தெரிவித்தார்.
"இன்று கடற்படை நாளையொட்டி அனைத்து கடற்படை வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள். தேசத்தைப் பாதுகாப்பதில் நமது கடற்படை வீரர்களின் துணிச்சல், அர்ப்பணிப்பு, தேசபக்தி, தன்னலமற்றச் சேவை ஆகியவற்றிற்கு வீர வணக்கம் செலுத்துவோம். அனைத்து கடற்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் எனது வாழ்த்துகள்" என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் செயலகம் ட்வீட் செய்துள்ளது.
இதையும் படிங்க: கப்பற்படை விமானத்தின் முதல் பெண் விமானி சிவாங்கி ஸ்வரூப்!