மும்பை: பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் உடல்நலக் குறைவு காரணமாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று (பிப். 6) காலை அவர் உயிரிழந்தார். அவரது இறப்புச் செய்தியை அவரது தங்கை உஷா மங்கேஷ்கர் உறுதிசெய்தார்.
சிகிச்சையில் 28 நாள்கள்...
இந்நிலையில், லதா மங்கேஷ்கருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர் பிரசித் சம்தானி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "லதா மங்கேஷ்கர் இன்று காலை 8.12 மணியளவில் காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
கரோனா தொற்று பாதிப்புக்கு பின் 28 நாள்களுக்கு மேலாக அவர் சிகிச்சையில் இருந்ததால் அவரின் உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டதால் அவர் உயிர்பிரிந்தது" எனத் தெரிவித்தார்.
அரசு மரியாதை
முன்னதாக, அவர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜன.8ஆம் தேதி கரோனா தொற்று பாதிப்பிற்குள்ளாகியது.
மேலும், லதா மங்கேஷ்கரின் உடல் மருத்துவமனையில் இருந்து மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு மதியம் 12.30 மணியளவில் கொண்டுசெல்லப்படுகிறது. பின்னர், மும்பை சிவாஜி பூங்காவில் இன்று மாலை 6. 30 மணியளவில் இறுதி மரியாதை நடைபெறும்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, லதா மங்கேஷ்கரின் இறுதி மரியாதை முழு அரசு மரியாதையுடன் என அறிவித்துள்ளார். லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நாள்கள் தேசிய அளவிலான துக்கம் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதையொட்டி தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
இதையும் படிங்க: 'மெலடி குயின்' லதா மங்கேஷ்கர் வாழ்க்கை பயணம்