டெல்லி: ஆதார் அட்டை என்பது இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்திய அரசு வழங்கிய தனித்துவமான அடையாள அட்டை ஆகும். அரசின் சலுகைகள், சேவைகள் உள்பட பெரும்பாலானவற்றிற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணைப் போலவே, பான் எண்ணும் ஒரு குடிமகனுக்கு முக்கியமானது. வரி செலுத்தும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பான் எண் வழங்கப்படுகிறது. பான் எண் (PAN - Permanent Account Number) என்பது வரி செலுத்துவோருக்கான தனித்துவமான எண் ஆகும். ஒருவரது வருமான வரிக் கணக்கு, முதலீடுகள், வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை வருமான வரித்துறைக்கு தெரிவிக்க பான் கார்டு பயன்படுகிறது. அதேபோல், ஒரு குடிமகனின் வங்கி சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வரி ஏய்ப்பு, போலி ஆதார் - பான் மோசடி உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையில், மத்திய அரசு ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, அனைவரும் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கடந்த ஆண்டு அறிவித்தது.
அவ்வாறு இணைக்காவிட்டால், பான் எண் செயலிழக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதேபோல் முதலீட்டாளர்களும் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என செபி (SEBI) அறிவுறுத்தியது. கடந்த ஆண்டு முதல், ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஜூன் 30) முடிவடைகிறது.
ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள் என்பதால், இதுவரை இணைக்காதவர்கள் உடனடியாக இணைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இணைப்பவர்கள் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தி இணைக்க வேண்டும். இதனை வருமான வரித்துறையின் incometax.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று, ஆதார் மற்றும் பான் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
இன்று பான் உடன் ஆதாரை இணைக்காவிட்டால் நாளை முதல் பான் எண் செயலிழந்துவிடும். ஒருவரது பான் கார்டு செயலிழந்துவிட்டால், அதனை எங்கும் பயன்படுத்த முடியாது. அதன் பிறகு வருமான வரி தொடர்பாக ஏற்படும் எல்லா பிரச்னைகளுக்கும் அவரே பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்காவிட்டால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும்.
அதேநேரம், இந்த ஆதார்- பான் இணைப்பு அறிவிப்பில் சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 80 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், இந்திய குடியுரிமை இல்லாதவர்கள், வருமான வரிச்சட்டத்தின்படி இந்திய குடிமகனாக இல்லாதவர்கள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்கத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.