- " class="align-text-top noRightClick twitterSection" data="">
பெங்களூரு: இஸ்ரோவால் உருவாக்கப்பட்டு சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்படும் ஆதித்தியா எல் 1-ல் பொருத்தப்பட்டுள்ள முதன்மை பேலோடான விசிபிள் எமிஷன் லைன் கரோனாகிராஃப் (VELC) பேலோடு நிமிடத்திற்கு ஒரு புகைப்படம் என நாள் ஒன்றுக்கு சுமார் 1,440 படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம் ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ள இந்த பேலோடு, தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சவாலான வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆதித்யா எல் 1-ல் பொருத்தப்பட்டுள்ள ஏழு பேலோடுகளில் விசிபிள் எமிஷன் லைன் கரோனாகிராஃப் (VELC) மிகவும் முக்கியம் வாய்ந்ததாகவும், முதன்மையானதாகவும் பார்க்கப்படுகிறது எனவும் விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சூரியனின் கரோனா (மகுடம் போன்ற பகுதி) பகுதியை 24 மணி நேரமும் ஆய்வு செய்து நிமிடத்திற்கு ஒரு படம் என நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரத்து 440 படங்களை பூமிக்கு அனுப்பும் என்று ஆதித்யா L1 திட்ட விஞ்ஞானி மற்றும் VELC-யின் செயல்பாட்டு மேலாளர் ஆராய்ச்சியாளர் டாக்டர் முத்து பிரியல் கூறியுள்ளார்.
மேலும் ஆதித்யா எல் 1-ல் இருந்து கிடைக்கப்பெரும் தகவலை அறிவியல் ஆய்வுக்கான தரவுகளாக மாற்றும் பணிக்காக, இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் குழு இஸ்ரோவின் தரவுகள் பெறும் மையத்தில் இருந்து இயங்கும், எனக் கூறிய டாக்டர் முத்து பிரியல், சூரியனில் இருந்து வெளியேறும் கரோனல் மாஸ் எஜெக்ஷன் எனப்படும் காந்தபுலத்தின் வெளியேற்றம் குறித்து ஆய்வு செய்ய இந்திய வானியற்பியல் நிறுவனத்தால் ஒரு தனித்துவமான மென்பொருள் உருவாக்கப்பட்டு ஆதித்யா எல் 1-ல் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த மென்பொருள், தொடர்ந்து 24 மணி நேரமும் ஆய்வு செய்து காந்தபுலத்தில் இருந்து வெளியேறும் காந்தபுயல், அதன் வீரியம், அதனால் பூமிக்கு ஏதேனும் ஆபத்து உள்ளதா? உள்ளிட்ட பல தகவல்களை உடனுக்குடன் இஸ்ரோவின் ஆய்வு மையத்திற்கு அனுப்பும் எனவும் இதனை அடிப்படையாகக் கொண்டு முன்கூட்டியே தகவல்களை தெரிந்துகொள்ளலாம் எனவும் ஆராய்ச்சியாளர் டாக்டர் முத்து பிரியல் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசியுள்ள இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் சசிகுமார் ராஜா, 190 கிலோ எடைகொண்ட இந்த VELC பேலோட், ஆதித்யா எல் 1-ன் மொத்த ஆயுட்காலமான 5 வருடங்கள் வரை தொடர்ந்து புகைப்படங்களை அனுப்பும் எனவும் மற்ற பேலோடுகளோடு ஒப்பிடுகையில் இது தொழில்நுட்ப ரீதியாக திறம்பட உருவாக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும் ஆதித்யா எல் 1 அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தின் இடைப்பட்ட பகுதியில் எல் 1 புள்ளியில் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிப்ரவரி இறுதிக்குள் சூரியனின் முதல் புகைப்படம் பூமிக்கு அனுப்பப்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆதித்யா எல்1-ல் சூரியனை மட்டும் ஆய்வு செய்ய பொருத்தப்பட்டுள்ள 4 பேலோடுகளில் முதலில் மூன்று பேலோடுகள் திறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு இறுதியாகவே முதன்மை பேலோடான VELC திறக்கப்படும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். காரணம் முதலில் VELC பேலோடை திறந்தால் அதன் கண்ணாடியில் துசிகள் அடைத்து தெளிவான புகைப்படம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் விஞ்ஞானிகள் இந்த மாற்று வழிக்குத் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ISRO: நிலவில் கந்தகம் இருப்பதை மீண்டும் உறுதி செய்தது பிரக்யான் ரோவர் - இஸ்ரோ தகவல்!