இமாச்சலப் பிரதேசத்தில் ரெக்காங் பியோ-சிம்லா நெடுஞ்சாலையில் நேற்று (ஆகஸ்ட் 11) ஏற்பட்ட நிலச்சரிவில் 13 பேர் மீட்கப்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மீட்கப்பட்டோரில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், மேலும் 50 பேருக்கும் மேல் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மீட்புப் பணி
இது குறித்து துணை காவல் ஆணையர் அபித் ஹுசைன் சாதிக் கூறுகையில், “நேற்று (ஆக 11) ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் 50க்கும் மேற்பட்டோர் புதைக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இமாச்சல சாலை போக்குவரத்து கழகத்தின் (HRTC) பேருந்து உள்பட பல வாகனங்கள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளது.
நிலச்சரிவில் சிக்கி புதைந்த பேருந்தையும் சரக்கு வாகனத்தையும் மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு, இந்தோ - திபெத் எல்லை காவல் படை, உள்ளூர் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
30 முறை நிலச்சரிவு
இதற்கிடையில், நரேந்திர மோடி இமாச்சல் முதல்வருடன் பேசியதாகவும், தொடர்ந்து மீட்புப் பணிகளில் அனைத்து ஆதரவையும் அளிப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், முதல்வர் ஜெய் ராம் தாக்கூரிடம் பேசியதாகவும், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, காயமடைந்த மக்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று சோலன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்ததும், இந்தாண்டு பருவமழை தொடங்கிய பின்னர் இமாச்சலில் இது வரை 30க்கும் மேற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.