டெல்லி: முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் மீதான நில மோசடி வழக்கு தொடர்பாக டெல்லி, பாட்னா மற்றும் பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 16 இடங்களில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) சோதனை நடத்தி வருகிறது. லாலுவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) எம்எல்சி சுனில் சிங்கின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
அவரது வீட்டில் பல்வேறு ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ரயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக லாலுவின் மனைவி ராப்ரி தேவி மற்றும் மகள் ஹேமா யாதவ் ஆகியோருக்கு பலர் நிலம் அன்பளிப்பாக வழங்கியது சிபிஐ விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கில் ரயில்வே ஊழியர் ஹரிதயானந்த் சவுத்ரி மற்றும் முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தின் அப்போதைய சிறப்புப் பணி அதிகாரி போலா யாதவ் ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர். போலா 2004 முதல் 2009 வரை லாலுவின் சிறப்புப் பணி அதிகாரி ஆக இருந்தார்.
லாலு பிரசாத் , அவரின் இரண்டு மகள்கள், அவரது மனைவி, ராப்ரி தேவி மற்றும் 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
பாட்னாவில் வசிக்கும் பலர் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மூலம் மாநில தலைநகரில் உள்ள நிலங்களை லாலு பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கும், சில தனியார் நிறுவனத்துக்கும் அன்பளிப்பாக அளித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க:லாசன் டயமண்ட் லீக் இறுதி போட்டியில் நீரஜ் சோப்ரா