போபால்: மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூரில் உள்ள கரஹாலில் ஏற்பாடு செய்யப்பட்ட சுயஉதவி குழு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த மாநாட்டில் கௌஷல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களுக்கான நான்கு திறன் மையங்களை தொடங்கி வைத்தார். சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வங்கிக் கடன் அனுமதி கடிதங்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் சுய உதவிக்குழு உறுப்பினர்களாக உள்ள ஒரு லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், எனது பிறந்தநாளில் என்னுடைய தாயாரைச் சந்திக்கச் செல்ல முடியாவிட்டாலும், இப்போது லட்சக்கணக்கான தாய்மார்களின் ஆசிர்வாதம் எனக்கு கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டின் மகள்கள் மற்றும் தாய்மார்கள் எனது பாதுகாப்பு கவசங்கள்.
இங்கு வருவதற்கு முன்பு, குனோ தேசிய பூங்காவில் சிவிங்கிப்புலிகளை விடுவிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. உங்கள் மீது நம்பிக்கை இருப்பதால் சிவிங்கிப்புலிகளை உங்கள் காவலில் விடுவித்துள்ளேன். சிவிங்கிப்புலிகளுக்கு எந்த தீங்கும் வர அனுமதிக்க மாட்டீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 7 கோடி குடும்பங்கள் குழாய் நீர் இணைப்புகளைப் பெற்றுள்ளன, அவற்றில் 40 லட்சம் குடும்பங்கள் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவை.
கிராமப் பொருளாதாரத்தில் பெண் தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் 500 கோடி மதிப்பிலான பொருட்களை உற்பத்தி செய்து சந்தைகளில் விற்பனை செய்துவருகின்றனர். பெண்களின் கண்ணியத்தை உயர்த்துவதற்கும், அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களைத் தீர்ப்பதற்கும் நமது நாடு தொடர்ந்து உழைத்து வருகிறது.
நாட்டில் 11 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டு, 9 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புகள், இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு குழாயிலிருந்து தண்ணீர் வழங்குவது ஆகியவற்றின் மூலம் பெண்களின் வாழ்க்கை எளிதாகிவிட்டது. மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.11,000 கோடி நேரடியாக கர்ப்பிணித் தாய்மார்களின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள தாய்மார்களுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.1,300 கோடி கிடைத்துள்ளது. நாடு முழுவதும் சிறு தொழில்கள் மற்றும் வணிகங்களுக்கு இதுவரை ரூ.19 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் பெண் தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசின் இத்தகைய முயற்சிகளால், குடும்பத்தின் பொருளாதார முடிவுகளில் பெண்களின் பங்கு இன்று அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த 8 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாடு முழுவதும் காவல்துறையில் பெண்களின் எண்ணிக்கை 1 லட்சத்தில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமாக இரு மடங்காக உயர்ந்துள்ளது. நமது 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகள்கள் தற்போது ராணுவ படைகளில் அங்கம் வகித்து நாட்டின் எதிரிகளுக்கு எதிராகப் போரிட்டு வருகின்றனர். உங்கள் பலத்தில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. பெண்கள் மூலம் ஒரு சிறந்த சமுதாயத்தையும், வலிமையான தேசத்தையும் உருவாக்குவதில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல், முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, டாக்டர் வீரேந்திர குமார், ஃபக்கன் சிங் குலாஸ்தே, பிரஹலாத் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகள்... காட்டுக்குள் விடுவித்தார் பிரதமர் மோடி