உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் காவல்துறையினருக்கும் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் விவசாயிகள் தரப்பைச் சேர்ந்த எட்டு பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், எதிர்க்கட்சியினர் பலர் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திக்க லக்கிம்பூருக்கு படையெடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், இன்று(அக். 4) அதிகாலை லக்கிம்பூருக்கு விரைந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை உத்தரப் பிரதேச காவல்துறையினர் கைது செய்தனர். காவலில் வைக்கப்பட்டுள்ள அவர் தனது கைதுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரியங்கா காந்தி கைதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர். லக்கிம்பூருக்கு வர காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி ஆகியோர் திட்டமிட்டுள்ள நிலையில், அவர்கள் வருகைக்கு உத்தரப் பிரதேச அரசு அனுமதி மறுத்துள்ளது.
இதையும் படிங்க: தூய்மைப் பணியில் பிரியங்கா காந்தி: வைரலாகும் காணொலி