அசாம்: மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினரிடையே இட ஒதுக்கீடு தொடர்பாகக் கடந்த மே மாதம் 3-ஆம் தேதி ஏற்பட்ட பிரச்னை கலவரமாக மாறியது. கடந்த 5 மாதங்களாகக் கலவர பூமியாகப் பற்றி எரிந்து கொண்டிருந்த மணிப்பூரில் கூகி மற்றும் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த பல பேர் உயிரிழந்தனர். தற்போதும் மணிப்பூரில் கலவரம் நடந்த பதற்றம் குறையாத நிலையில், அண்டை மாநிலமான அசாமில் கூகி மற்றும் மெய்தி ஆகிய இரு சமூகமும் உற்று நோக்கும் சம்பவம் நடந்துள்ளது.
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற ஏ - பிரிவு கால்பந்து போட்டியில் மெய்தி மற்றும் குக்கி பழங்குடியின மக்களைச் சேர்ந்த வீரர்கள் ஒரே அணியில் விளையாடினர். இரண்டு சமூகத்தினரும் ஒரே அணியில் விளையாடியது மணிப்பூர் மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
இந்த 15 பேர் கொண்ட கால்பந்து அணியில் ராமகண்டா கிளப்பைச் சேர்ந்த 7 பேர் விளையாடினர். மற்ற 7 நபர்களில் ஒருவர் கூகி சமூகத்தைச் சேர்ந்தவராகவும், மற்றவர்கள் மெய்தி சமூகத்தை சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். இந்த இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்களும் ஒரே இடத்தில் தங்கி, தங்களது உணவுகளைப் பகிர்ந்து, அமைதியை வேண்டி ஒன்றாக விளையாடினர். இந்த சம்பவம் மணிப்பூர் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாரி சக்தி விருது பெற்ற கார்த்யாயனி அம்மா காலமானார்!