சாமராஜ்நகர்: கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டத்தின் ஹனூர் தாலுக்காவில் உள்ள ஒகேனக்கல் அருவியில் குளிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இரண்டு பேர், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சபரி (24) மற்றும் அஜித் (26) என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் தங்களது சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு, நேற்று (ஜூலை 22) மகாதேஸ்வரா மலைக் கோயிலுக்கு வந்து உள்ளனர்.
மலைக் கோயிலில் வழிபட்ட பின்னர் இந்த குழுவினர், ஒகேனக்கல் அருவிக்கு குளிக்கச் சென்று உள்ளனர். அனைவரும் உற்சாகமாக குளித்து கரைக்கு திரும்பிய நிலையில், அஜித் மற்றும் சபரி ஆகிய இருவர் மட்டும் நீண்ட நேரம் ஆகியும் கரைக்கு திரும்பவில்லை. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த குழுவினர், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த நிலையில் உள்ளூர் மக்களின் துணை உடன், மகாதேஸ்வர் மலைக் கிராம காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து உள்ளனர்.
இதனையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், திறமையான நீச்சல் வீரர்களைக் கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இந்த தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, அஜித் மற்றும் சபரியின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக மகாதேஸ்வரா மலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த மே மாதம், ஒகேனக்கல் அருவி நீரில் அடித்துச் செல்லப்பட்டவரை இளைஞர்கள் சேர்ந்து மீட்ட சம்பவம் நடைபெற்று உள்ளது. சென்னை கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர், ரகு. இவர் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் மெயின் அருவி அருகே நண்பர்களுடன் சுற்றிப் பார்த்துவிட்டு அருவியில் குளித்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்து அருவியிலே அடித்துச் செல்லப்பட்டார். ரகுவிற்கு நீச்சல் தெரிந்ததால் சுமார் 100 மீட்டர் தூரம் நீச்சல் அடித்துக் கொண்டே, தொங்கு பாலத்தின் அடியில் இருக்கும் பாறையை பிடித்துக் கொண்டு ''என்னைக் காப்பாற்றுங்கள்'' என கூச்சலிட்டுள்ளார்.
இதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள், போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்குத் தகவல் அளித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் தாமதமாக வந்ததால், பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை பஞ்சாயத்து தலைவரின் கணவர் சரவணன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சிபி, ராஜ்சேகர், அரவிந்த் குமார் ஆகியோர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரை பத்திரமாக உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட ரகு, ’’தனக்கு நீச்சல் தெரிந்ததால் தப்பித்தேன்’’ என்றும்; ’’இது தனக்கு மறுபிறவி’’ என்றும் கூறி, ’’தன்னைக் காப்பாற்றியவருக்கு நன்றி’’ தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.
இதையும் படிங்க: பிரமிக்க வைக்கும் கங்குவா கிளிம்ஸ் - சூர்யா ரசிகர்கள் உற்சாகம்!