திருவனந்தபுரம்: வரதட்சணை குறித்து பல விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், அதன் தாக்கமும், வேகமும் சாதி போல் குறையாமலே உள்ளது. அந்தவகையில் சமீபகாலமாக கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் ஏற்படும் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
இதனை தடுக்கும் வகையில், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோழிக்கோடு பல்கலைக்கழகம், வரதட்சணை எதிர்ப்பு ஒப்பந்தம் செய்த பிறகே மாணவர்கள் கல்லூரிகளில் இணைய முடியும் என அறிவித்துள்ளது. வெறும் அறிவிப்போடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், வரதட்சணை வாங்கமாட்டேன், தரமாட்டேன் என மாணவர்கள் படிவத்தில் கையெழுத்து போட்ட பிறகே அவர்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
அதுமட்டுமின்றி, கல்லூரி படிப்பை முடித்த பின் வரதட்சணை வழக்குகளில் மாணவர்கள் சிக்கினால் அவர்களின் பட்டம் திரும்பப் பெறப்படும் எனவும் அதிரடியாக தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறுகையில், ”வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் திருமணமான இளம் பெண்கள் பலர் பாதிக்கப்படுவது அதிகரித்திருப்பதால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.