மேற்கு வங்கத்தில் உள்ள கிழக்கு ரயில்வே துறையின் தலைமை அலுவலக அடுக்கு மாடிக் கட்டடத்தில் நேற்று (மார்ச்.08) திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் எட்டு தீயணைப்பு வாகனங்களில் அங்கு சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்த கட்டடத்தின் 13வது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், நான்கு தீயணைப்பு வீரர்கள், இரண்டு ரயில்வே அலுவலர்கள், காவல் துறை அலுவலர் ஒருவர் உள்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அலுவலகம் குறித்த வரைபடம் அளிக்காததன் காரணமாகவே தீ விபத்து நிகழ்ந்ததாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "அக்கட்டடம் ரயில்வே துறைக்கு சொந்தமானது. ஆனால் இப்போது வரை, விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அத்துறையின் சார்பில் யாரும் வந்து பார்வையிடவில்லை என்பது தெரியவந்துள்ளது.
உள்ளே சென்று தீயை அணைக்க மாநில தீயணைப்பு துறை, கட்டடத்தின் வரைபடத்தை கேட்டது. ஆனால், அவர்களிடமிருந்து எந்த விதமான ஒத்துழைப்பும் அளிக்கப்படவில்லை" என்றார். இதற்கு பதிலளித்துள்ள கிழக்கு ரயில்வே மேலாளர் மனோஜ் ஜோஷி, "கட்டடத்தின் வடிவமைப்பு குறித்த தகவல்கள் உடனடியாக அளிக்கப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால், உதவி செய்வதற்காக ரயில்வே அலுவலர்கள் அங்குதான் இருந்தனர்" என்றார். கொல்கத்தா காவல் துறை இதுகுறித்து தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.