ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் காது ஷ்யாம் என்ற வைணவ கோயில் உள்ளது. பிரசித்த பெற்ற இக்கோயிலில் தற்போது விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் காது ஷ்யாம் கோயில் நடை திறக்கப்பட்டது.
இதனால், நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்த பக்தர்கள் வேகவேகமாக கோயிலுக்குள் நுழைய முற்பட்டனர். அவர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றபோது, வரிசையில் நின்றுகொண்டிந்த 63 வயதான மூதாட்டிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மயக்கமடைந்தார்.
அப்போது, அவருக்கு பின்புறம் நின்றுகொண்டிருந்த இரண்டு பெண்களும் நெரிசலை தாக்குப்பிடிக்கமுடியாமல், அந்த மூதாட்டியை தாங்கியபடியே கீழே சரிந்து விழுந்தனர். இதில்,மூவரும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
இதை உறுதிசெய்த சிகார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஷ்டிரதீப், சம்பவம் நடந்த பகுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும், அதன் மூலம் விரிவான தகவல்கள் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டநெரிசலில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து கோயில் நடை அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இளைஞரின் மதத்தை அறிய ஆடைகளைக்கழற்றி அவமதித்த கும்பல் - அதிர்ச்சி சம்பவம்!