பஞ்சாப்: வாரீஸ் டி பஞ்சாப் அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங்கை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர். தனி நாடு கொள்கையை முன்னிறுத்தி போராட்டம் நடத்தி வரும் காலிஸ்தான் அமைப்புகளில் ஒன்று வாரீ டி பஞ்சாப். அந்த அமைப்பின் தலைவராக அம்ரித் பால் சிங் என்பவர் செயல்பட்டு வந்தார்.
பஞ்சாப் நடிகர் தீப் சித்துவால் தொடங்கப்பட்ட வாரீஸ் டி பஞ்சாப் அமைப்பு கடந்த 2022 ஆம் ஆண்டு அவரது மறைவுக்கு பின் அம்ரித் பால் சிங்கின் வசமானது. குறுகிய காலத்தில் வாரீஸ் டி பஞ்சாப் அமைப்பின் தலைவராக அம்ரீத் பால் சிங் உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் அம்ரித் பால் சிங்கை பஞ்சாப் போலீசார் தேடி வந்தனர். அம்ரித் பால் சிங்கின் ஆதரவாளர்கள் பலர் பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
லண்டன் தப்பிச் செல்ல இருந்த அம்ரித் பால் சிங்கின் மனைவியை அமிர்தசரஸ் விமான நிலையத்தில் வைத்து பஞ்சாப் போலீசார் மடக்கிப் பிடித்தனர். இந்நிலையில் அம்ரித் பால் சிங்கை கைது செய்ததாக பஞ்சாப் போலீசார் தெரிவித்து உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பஞ்சாப்பில் இருந்து தப்பித்துச் சென்ற அம்ரித் பால் சிங் நேபாளத்தில் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் அம்ரித் பால் சிங் தாமாக முன்வந்து சரணடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலம் மோகாவில் சரணடைந்த அம்ரித் பால் சிங்கையும் போலீசார் கைது செய்து உள்ளனர். பஞ்சாப் போலீசார் மற்றும் உளவுத் துறை அதிகாரிகள் கூட்டாக நடத்திய சோதனையில் அம்ரித் பால் சிங் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏறத்தாழ 36 நாட்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த அம்ரித் பால் சிங் ஒருவழியாக கைது செய்யப்பட்டு உள்ளார். அசாம் மாநிலம் திப்ருகார்க் சிறையில் அம்ரித் பால் சிங் அடைக்கபட உள்ளதாக பஞ்சாப் போலீசார் தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே அம்ரித் பால் சிங்கின் ஆதராவாளர்கள் பலர் திப்ருகார்க் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அசாம் திப்ருகார்க் சிறையில் அம்ரித் பால் சிங் அடைக்கப்படுவதை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது, சிறையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். சிறையில் அடைக்கப்படும் அம்ரித் பால் சிங்கை நீதிமன்றம் மூலம் காவலில் எடுத்து போலீசார் விசாரிக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : அம்ரித் பால் சிங் மனைவி கைது - லண்டன் தப்ப இருந்தவரை மடக்கிப் பிடித்த போலீசார்!