டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில், கடந்த 2018-ம் ஆண்டு, 13 ஆயிரத்து 578 கோடி ரூபாய் கடன் மோசடி நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இந்தியாவின் பொதுத்துறை வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி நடந்தது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த மோசடியில், பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. இதையடுத்து, நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். இதைத் தொடர்ந்து, நீரவ் மோடி கடந்த 2019-ம் ஆண்டு லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை நாடு கடத்த இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், நீரவ் மோடியின் நம்பிக்கைக்குரிய நபரான சுபாஷ் சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நீரவ் மோடியின் நிறுவனத்தில் துணை பொது மேலாளராக பணிபுரிந்ததாகவும், நீரவ் மோடியின் மொத்த வியாபாரத்தையும் கவனித்து வந்ததாகவும் தெரிகிறது.
கடன் மோசடியில், இவரது பெயரும் சேர்க்கப்பட்டதால், கடந்த 2018-ம் ஆண்டு நீரவ் மோடியுடன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்த இந்திய அரசு நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. அவரை கைது செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. சர்வதேச காவல்துறையான இன்டர்போல், ரெட் கார்னர் நோட்டீஸ் அளித்துள்ளது.
இந்த நிலையில், எகிப்தில் தலைமறைவாக இருந்த சுபாஷ் சங்கர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மும்பை அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வெறுப்பு, வன்முறை நாட்டை பலவீனப்படுத்தும்- ராகுல் காந்தி!