திருவனந்தபுரம்: தமிழ் நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த அதி கனமழையால் சென்னை முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, தற்போது தென் தமிழகத்தில் பெய்த அதி கனமழையால் கடந்த சில நாட்களாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இதற்காக தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, கேரள அரசு அம்மாநில பொதுமக்களிடமிருந்து நிவாரணம் சேகரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. நிவாரணம் சேகரிக்கும் பணியை கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்து வருகிறது. இந்த பணியை மேற்கொள்வதற்காக ஊரக வளர்ச்சி ஆணையரும், தேவஸ்வம் சிறப்புச் செயலாளருமான எம்.ஜி.ராஜமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக நன்கொடை அளிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நிவாரணம் வழங்குபவர்கள், ஒரு குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கி கிட் விவரத்தை கேரள மாநில அரசு வெளியிட்டுள்ளது. மேலும், இது தவிர தனியாக பொருட்கள் வழங்க விரும்புபவர்களும் வழங்கலாம் என அறிவித்துள்ளது.
இந்த நிவாரணப் பொருட்கள் திருவனந்தபுரம் கனகக்குன்னு அரண்மனைக்கு எதிரே உள்ள மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பில் உள்ள (கிட்) பொருட்கள் விபரம்:
- அரிசி - 5 கிலோ
- துவரம் பருப்பு - 1 கிலோ
- உப்பு - 1 கிலோ
- சர்க்கரை - 1 கிலோ
- கோதுமை மாவு - 1 கிலோ
- ரவை - 500 கிராம்
- மிளகாய்த் தூள் - 300 கிராம்
- சாம்பார் பொடி - 200 கிராம்
- மஞ்சள் தூள் - 100 கிராம்
- ரசம் பொடி - 100 கிராம்
- தேயிலை தூள் - 100 கிராம்
- வாளி -1
- குளியல் கப் - 1
- சோப்பு - 1
- டூத் பேஸ்ட் - 1
- டூத் பிரஷ் - 4
- சீப்பு - 1
- லுங்கி - 1
- நைட்டி - 1
- துண்டு - 1
- சமையல் எண்ணெய் - 1 லிட்டர்
- சானிட்டரி பேட் - 2 பாக்கெட்
இதையும் படிங்க: தமிழக மழை வெள்ள பாதிப்பைத் தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்