ஹைதராபாத்: ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்த 75ஆவது ஆண்டை நாம் கொண்டாடி வருகிறோம். இந்த வேளையில், ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தை எதிர்த்து போர் தொடுத்தவர்கள் குறித்து நமது ஈடிவி பாரத் தொகுத்து வழங்கி வருகிறது. இத்தொகுப்பு பழசிராஜா குறித்து விவரிக்கிறது.
கேரளாவின் மலபார் பகுதியில் புரட்சிகர போராட்டத்தை நடத்தியவர் பழசிராஜா. வயநாடு பகுதியில் இவர் தலைமையில் நடந்த போராட்டங்கள் வீரமிக்க வரலாறாக கருதப்படுகிறது.
ஹைதர் அலி, திப்பு சுல்தானுக்கு பிறகு தெற்கு பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு அதிக தொல்லைகளை தந்தவர் பழசிராஜா. கிழக்கிந்திய கம்பெனியின் எண்ணத்தை அறிந்த பின்பு, ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கினார். கேரளாவின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கிழக்கிந்திய கம்பெனிக்கு வரி கட்டிக்கொண்டிருந்தபோது, வரி கட்ட மறுத்த பழசிராஜா, மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் இறங்கினார்.
துப்பாக்கிகள் வைத்திருந்த ஆங்கிலேயர்களின் ராணுவத்திற்கு எதிராக வில் அம்பு கொண்டு போர் தொடுத்தார். ஆங்கிலேயர்களுக்கு மீள முடியாத பேரிழப்பை ஏற்படுத்தினார். 1793 முதல் 1805ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி, போர்களத்தில் தனது இறுதி மூச்சை விட்டார்.
நாயர் மற்றும் குரிச்யா படைவீரர்கள் உதவியுடன் அவர் நடத்திய கொரில்லா போர் மறக்க முடியாதது. கன்னவம் மற்றும் வயநாடில் உள்ள காடுகள் அதற்கு சாட்சியாக இருக்கின்றன. தனது படைக்கு மன உறுதியை அளிப்பதற்கு அவர் தவறவில்லை.
1797ஆம் ஆண்டு பழசிராஜாவின் போர் தந்திரத்தால் பெரியா கணவாய் அருகே கிழக்கிந்திய கம்பெனி தோல்வியைச் சந்தித்தது. கிழக்கிந்திய கம்பெனி பழசிராஜாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 1797 முதல் 1800ஆம் ஆண்டு இடையே அமைதி ஒப்பந்தம் போடப்பட்ட பின்பும், பழசிராஜாவின் படை கிழக்கிந்திய கம்பெனிக்கு தொல்லை அளித்து வந்தது.
1800ஆம் ஆண்டுக்கு பிறகே ஆங்கிலேயர்கள் பக்கம் காற்று வீசத் தொடங்கியது. வீரத்தால் வெல்ல முடியாத பழசிராஜாவை, ஆங்கிலேயர்கள் துரோகத்தால் வெல்ல முடிவு செய்தனர். கொல்கர்கள் என அழைக்கப்படும் துரோகிகள் கூட்டத்தை வளர்த்துவிட்டனர். பழசிராஜாவின் கொரில்லா படை மீது கொல்கர்களின் கொரில்லா படையை ஏவிவிட்டு, பழசிராஜாவை வயநாடு காடுகளில் தனிமைப்படுத்தினர்.
ஆர்தர் வெல்லஸ்லி போன்ற போர் திறன் மிக்க ஆங்கிலேயனால் சாதிக்க முடியாததை, தாமஸ் ஹெர்வி பேபர் என்பவர் துரோகத்தால் சாதித்தான். பழசிராஜா இருக்கும் இடத்தை காட்டிக்கொடுக்க மண்ணின் மைந்தர்களையே ஒற்றர்கள் ஆக்கினான்.
1805ஆம் ஆண்டு கேரளா - கர்நாடக எல்லையில் உள்ள மயிலம்தொடு நதிக்கரை அருகே பழசிராஜா இறந்தார். அவர் மரணம் குறித்து வெவ்வேறு கதைகள் உள்ளன. பழசிராஜா ஆங்கிலேயர்கள் கையில் சிக்காமல் வைர மோதிரத்தை விழுங்கி தற்கொலை செய்து கொண்டதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. அவர் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மயிலம்தொடு நதிக்கரையில் இருந்து மந்தவாடி மலைப்பகுதிக்கு, பழசிராஜாவின் உடலை ஆங்கிலேயர்கள் மரியாதையுடன் எடுத்து வந்ததாக வரலாறு கூறுகிறது. பழசிராஜாவின் தளபதிகளான தளக்கல் சந்து, எடசென்னா குன்கன் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் எதுவும் இல்லை. பழசிராஜாவின் புரட்சிகர வரலாறு முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என வரலாற்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழசிராஜாவை நினைவுகூரும் வகையில் வயநாடு பகுதியில் இரண்டு நினைவுச் சின்னங்கள் உள்ளன. அவர் இறந்த மயிலம்தொடு பகுதியில் ஒரு நினைவுச் சின்னமும், மந்தவாடி பகுதியில் ஒரு நினைவுச் சின்னமும் உள்ளது.
இதையும் படிங்க: பாரவண்டி படுகொலை: 100 ஆண்டு கால ஆறா வடு!