திருவனந்தபுரம்: கேரளாவில் வன விலங்கு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான திட்டத்தை அமல்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றத்தை அணுக அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள வனத்துறை அமைசர் ஏ.கே. சசீதரன் கூறுகையில், கேரளாவில் மனித -விலங்கு மோதலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் தீர்க்கமான முடிவுகள் கிடைக்கப் பெறவில்லை. ஊருக்குள் நுழையும் வன விலங்குகள், பொது மக்கள் மற்றும் விளை நிலங்களைத் தாக்கி அழித்து வருகின்றன.
நாளுக்கு நாள் வனவிலங்குகள் தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருவதை அடுத்து, கேரளாவில் வன விலங்கு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளதாகத் தெரிவித்தார்.
வனவிலங்குகள் பெருக்கத்தின் கட்டுப்பாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய கேரள அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் வயநாடு பகுதியில் புலி தாக்கியதில் விவசாயி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து இதுதொடர்பான நடவடிக்கையில் ஈடுபட கேரள அரசு முனைப்புக் காட்டி வருகிறது. புலி தாக்கியதில் உயிரிழந்த விவசாயின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளதாகவும்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Pathare Accident: பேருந்து - லாரி மோதி விபத்து: ஷீரடிக்கு சென்ற பக்தர்கள் 10 பேர் பலி!