கோழிக்கூடு: கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது. இங்குள்ள அரசுப் பள்ளியில் பாலின வேறுபாடு இல்லாமல் ஆண், பெண் இருவருக்கும் ஒரே மாதிரியான சீருடை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாலின பாகுபாட்டைத் தவிர்க்க முயற்சி எடுத்துள்ளது.
கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள பாலுசேரி அரசுப் பள்ளியில் ஆண், பெண் இருவருக்கும் ஒரே நிறத்தில் சட்டை மற்றும் கால் சட்டை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக எர்ணாகுளம் மாவட்டம் வளையன்சிராவில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் இரு பாலருக்கும் முழங்கால் அளவிலான குட்டையான உடை வழங்கியுள்ளார்கள்.
கேரள அரசு கல்வித் துறையில் 'இதுபோன்ற புரட்சி'கரமான செயல்களில் ஈடுபடுகிறது, அதே வேளையில் இந்தச் செயல்களால் பல விமர்சனத்துக்கும் ஆளாகி உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி தனது முற்போக்கு கருத்துகளை பள்ளி மாணவர்களிடையே கட்டாயப்படுத்தி திணிப்பதாக பல அரசியல் கட்சிகளும், மத அமைப்புகளும் அதிருப்தி தெரிவித்துள்ளன.
இருப்பினும் இத்திட்டத்திற்கு ஆதரவும் பெருகிவருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் அனைத்துப் பள்ளிகளிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் கோரிக்கைவிடுத்துள்ளன.
கேரள உயர் கல்வித் துறை அமைச்சர் பிந்து கடந்த செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 14) இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தார். பாலுசேரி அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. 11, 12ஆம் வகுப்புகள் வரும் கல்வியாண்டிலிருந்து செயல்பாட்டுக்கு வரும் என அறிவித்தார்.
அப்பள்ளியின் இந்தத் திட்டத்தை எதிர்த்து இஸ்லாம் மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மூன்று மணி நேரப் போராட்டம் ஆசிரியர் பெற்றோர் சங்கப் பேச்சுவார்த்தைக்குப் பின் முடிவுக்கு வந்தது.