கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி. சாக்கோ, அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். உட்கட்சிக்குள்ளேயே நிறையப் பிரிவுகள் உள்ளதாகவும், ஜனநாயகம் மறுக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவரான அவர், தேசிய அளவில் செய்தித் தொடர்பாளராகவும் திருச்சூர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தேர்தல் வேட்பாளர் தேர்வின்போது, மாநில தலைவர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறியுள்ள அவர், "கட்சியில் ஜனநாயகம் இல்லை. எந்தெந்த வேட்பாளர்களை நிற்க வைக்க வேண்டும் என்பதை மாநில காங்கிரஸ் கமிட்டியிடம் ஆலோசிக்கவில்லை.
தேர்தல் குறித்தும், வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு குறித்தும் ஆலோசிக்க கமிட்டி அமைக்கப்படவில்லை. சமமான அளவில் அனைத்து மட்டங்களிலும் உட்கட்சி பூசல் நிலவுகிறது. இனி இங்கிருப்பதில் எந்த நியாயமும் இல்லை. சோனியா காந்தியிடம் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளேன்" என்றார்.
கட்சி தலைமையை எதிர்த்து 23 மூத்த தலைவர்கள் கடிதம் எழுதியபோது கூட, சாக்கோ அவர்களை கடுமையாக விமர்சித்திருந்தார். தற்போது, இவரே கட்சியிலிருந்து விலகியுள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.