திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வெப்பம் 35 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. இதற்கிடையில் மாநில மக்களின் நலன் கருதி சுகாதாரத் துறை பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
அதில், “இது தேர்தல் நேரம் என்பதால், அரசு ஊழியர்கள் உள்பட அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்கவும். நேரடி சூரிய ஒளி உடலில் படும்போதும் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே ஒரு குடை அல்லது தொப்பியை பயன்படுத்த வேண்டும். நீரிழப்பு பெரிய சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மாநிலத்தில் தற்போதைய ஈரப்பதம் 70 சதவீதம் முதல் 80 சதவீதமாக உள்ளது.
முதலில் நீங்கள் சுத்தமான தண்ணீரைக் குடிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை அடிக்கடி கழுவுவது நல்லது. கோவிட் காலம் என்பதால் கைகளை சுத்தம் செய்த பின்னரே முகத்தை கழுவ வேண்டும். முதியவர்கள், குழந்தைகள், இதய நோய் உள்ளவர்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கவனமாக இருக்கவும். உடலில் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அதிக வெப்பத்தின் நேரடி தாக்கத்தை தவிர்க்க அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை பெரும்பாலும் மாலை 4 மணிக்கு பிறகு நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. கேரளத்தில் 140 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறும்.
இதையும் படிங்க: கல்வி அமைச்சரை எதிர்கொள்ள நடிகையை நிறுத்திய பாஜக!