எர்ணாகுளம்: இஸ்லாமியப்பெண்கள், குலா சட்டம் மூலம் விவாகரத்து பெற அனுமதி வழங்கக்கோரி, கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், நீதித்துறை அமைப்புகள் மூலம் விவாகரத்து பெறுவது இஸ்லாமியப் பெண்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும், அதனால் விவாகரத்து செயல்முறை தாமதமாவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முகமது முஸ்டாக், சி.எஸ்.டயஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, இஸ்லாமிய பெண்கள் குலா மூலம் விவாகரத்து செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. அதில், 'இஸ்லாமியப்பெண்கள் தங்களுக்கு விவாகரத்து வேண்டுமானால், கணவரிடம் தலாக் கூற வேண்டும் என்றும், கணவரின் ஒப்புதல் இல்லாமல் குலாவைப் பயன்படுத்தி தன்னிச்சையாக விவாகரத்து செய்ய பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. குலா சட்டத்தைப் பயன்படுத்தினாலும், கணவரின் அனுமதியுடன் மட்டுமே விவாகரத்து செய்ய முடியும்' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று முகமது முஸ்டாக், சி.எஸ்.டயஸ் ஆகியோர் அடங்கிய அமர்விலேயே விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குலா விவாகரத்து முறையில், கணவர்களின் சம்மதத்திற்கு எந்த தொடர்பும் இல்லை எனத்தெரிவித்தனர். ஷரியத் சட்டமான குலாவின் படி, இஸ்லாமியப்பெண் ஒருவருக்கு கணவருடன் வாழ விருப்பம் இல்லை என்றால், விவாகரத்து அறிவிக்க முடியும் என்றும், திருமணத்தின்போது தான் பெற்றுக்கொண்ட பரிசுகளைத் திருப்பித் தர விருப்பம் தெரிவிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், விவகாரத்துக்காக பெண்கள் தலாக் கூறும்போது கணவன் மறுப்புத்தெரிவித்தால், பெண்கள் விவாகரத்து பெறுவதற்கான மற்ற சாத்தியக்கூறுகள் பற்றி குரானில் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
அதேபோல் ஒரு பெண் தன் விருப்பப்படி விவாகரத்து செய்யக்கூடிய வேறு எந்த சட்ட முறைகள் குறித்தும் மனுதாரர்கள் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்தச்சூழ்நிலையில் ஒரு இஸ்லாமியப்பெண் தன் விருப்பப்படி விவாகரத்து செய்ய குலா மட்டுமே சட்டப்பூர்வமான வழி என்றும் தெரிவித்தனர்.
குலா என்பது விவாகரத்துப் பெறுவதற்கான ஒரு சட்ட நடைமுறையாகக் கருதப்படுவதால், இஸ்லாமியப்பெண்கள் அதன் மூலம் விவாகரத்து பெற நீதிமன்றத்தை அணுகத்தேவையில்லை என்றும் தெரிவித்த நீதிபதிகள், தங்களது பழைய தீர்ப்பை உறுதிப்படுத்தி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இதையும் படிங்க: 'தம்மாத்துண்டு ஆங்கர் தான்டா... '; கூகுளுக்கு ஃபைன் அடிக்கக் காரணமான வழக்கறிஞர்