திருவனந்தபுரம்: கேரளத்தில் கோவிட் பாதிப்பாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. புதன்கிழமை (ஏப்.14) பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 13.45 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், அடுத்த இரு தினங்களில் 2.5 லட்சம் கோவிட் பரிசோதனைகள் நடத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், “கோவிட் -19 பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் மும்முனை திட்டத்தில் கவனம் செலுத்தவுள்ளது. அவை, மிகப்பெரிய அளவிலான சோதனை, கடுமையான தடைகள் மற்றும் தடுப்பூசி ஆகியவை ஆகும். அதன்படி, அனைத்து மாவட்டங்களும் பெரிய அளவிலான சோதனைகளை செய்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் மாநிலத்தில் சிறப்பு சோதனைகள் நடத்தப்படவுள்ளன. இந்தச் சிறப்பு சோதனை நிகழ்வில் சுற்றுலாப் பயணிகள் முதல் அரசியல் தலைவர்கள் வரை சோதிக்கப்படுவார்கள். இதில் முக்கியமாக, கோவிட் -19 ஹாட்ஸ்பாட்களில் வசிப்பவர்கள், தொழிலாளர்கள் போன்ற உயர் ஆபத்தில் உள்ளவர்கள் மீது கவனம் செலுத்தப்படும். மால்களில் ஆர்டி-பி.சி.ஆர் சோதனை நடத்தப்படும். கடந்த வாரத்தில் மாநிலத்தில் கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்து வந்தாலும், மாணவ- மாணவியரின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதால் தேர்வுகள் நடத்த அரசு பரிந்துரைக்கிறது.
கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, அனைத்து பொது செயல்பாடுகளுக்கும் முன் அனுமதி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று உயர் மட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வெளிப்புற நிகழ்வுகளுக்கு பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 50 விழுக்காடு ஆக இருக்க வேண்டும்” என்றார்.
கேரளத்தில் புதன்கிழமை (ஏப்.14) 8,778 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அந்த வகையில், மொத்த பாதிப்புகள் 58 ஆயிரத்து 245 ஆக உள்ளன. இந்நிலையில், புதன்கிழமை மட்டும் 24 மணி நேரத்தில், 65 ஆயிரத்து 258 மாதிரிகளை அரசு சோதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.