திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னதாக, முகலாயர்களின் வரலாறு, குஜராத் கலவரம் மற்றும் டார்வின் கொள்கைகள் குறித்த பாடங்களை மேல்நிலை வகுப்பு பாடத் திட்டத்தில் இருந்து தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) நீக்கியது. இதற்கு பாஜக ஆளாத மாநிலங்கள் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மாணவர்களின் பாடச் சுமையை குறைக்கவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக NCERT தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், இந்திய வரலாற்றில் முகலாயர்களின் பங்கை மத்திய அரசு நீக்குவதாக பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், NCERT மூலம் நீக்கப்பட்ட பாடங்களை பாடத் திட்டத்தில் சேர்த்து கற்பிக்க உள்ளதாக கேரள கல்வித்துறை அமைச்சர் வி சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவன்குட்டி, “கேரள பாடத்திட்டக் குழு இது தொடர்பாக விரிவாக ஆலோசித்தது. அவர்கள் காந்தி இறந்துவிட்டார் என்று கூறுகிறார்கள். ஆனால், காந்தி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். பரிணாமக் கோட்பாடுகள் உள்பட பல பாடங்கள் நீக்கப்பட்டன. பொருளாதாரம், அரசியல் அறிவியல் மற்றும் வரலாறு புத்தகங்களில் பெரும்பாலான பகுதிகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
ஆனால், கேரள மாநில பாடத்திட்டக் குழுவின் பரிந்துரை என்னவென்றால், நீக்கப்பட்ட பகுதிகளை இணைப்பதுதான். இது தொடர்பாக முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம். வரலாற்றை மாற்றுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? மத்திய அரசு மறுப்புத் தெரிவிக்கும் வரை, கேரள அரசு சுதந்திரமாக பாடத்திட்டங்களை புத்தகங்களாக அச்சிடும்.
கேரளா, அரசியல் அமைப்பு மற்றும் மதச்சார்பற்ற மதிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் முன்னிலையில் உள்ளது. நீக்கப்பட்ட குஜராத் கலவரம் மற்றும் முகலாயர்களின் வரலாற்றைப் படிப்பதையே கேரளா கருத்தாக தெரிவிக்கிறது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: Amartya Sen: அமர்த்தியா சென் விவகாரத்தில் இனி தர்ணா தான்.. முதலமைச்சர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை!