கூறைப்பட்டு உடுத்தி தாலி கட்டிக்கொள்ளுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், கேரளாவைச் சேர்ந்த ஒரு மணப்பெண் பி.பி.இ. பாதுகாப்பு உடை அணிந்து தனது மணமகனைக் கரம்பிடித்துள்ளார்.
மணமகன் சரத் 17 நாள்களுக்கு முன்னர்தான் வெளிநாட்டிலிருந்து தனது சொந்த ஊரான ஆலப்புழாவுக்கு வந்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த அபிராமி என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், இவருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது.
உடனிருந்த அவரது தாய்க்கும் கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இருவரும் கோவிட்-19 வார்டில் சேர்க்கப்பட்டனர். நிச்சயிக்கப்பட்ட நாளில் திருமணம் நடைபெற வேண்டும் என இரு வீட்டாரும் உறுதியாக இருந்ததால், அதிரடி முடிவை இரு வீட்டாரும் எடுத்தனர்.
மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு, கோவிட்-19 வார்டிலேயே திருமணத்தை நடத்த முடிவெடுத்தனர். மணப்பெண் அபிராமி பிபிஇ பாதுகாப்பு உடையுடன் கோவிட்-19 வார்டு வந்தார்.
இரு வீட்டின் முக்கிய நபர்கள் சிலர் மட்டும் அங்கு வர, மாப்பிள்ளை சரத் அபிராமி கழுத்தில் தாலியைக் கட்டினார். தனது திருமணத்திற்கு உறுதுணையாக நின்ற மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை, பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த மணமக்கள், இந்த வித்தியாச திருமணம் தங்கள் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் என்றனர்.
இதையும் படிங்க: 37 ஆண்டுகளுக்கு பிறகு அமைதி வழிக்கு திரும்பும் உல்பா போராளி