புதுடெல்லி : பினராய் விஜயன், நரேந்திர மோடி சந்திப்பு டெல்லியில் வியாழக்கிழமை (மார்ச் 24) நடைபெற்றது. தொடர்ந்து பினராய் விஜயன் மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் சந்தித்து பேசியது தொடர்பான புகைப்படங்களை பிரதமர் அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.
கே.ரயில் திட்டம் : இந்தச் சந்திப்பின்போது, “பிரதமரும், முதலமைச்சரும் மாநிலத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்துள்ளனர். குறிப்பாக சில்வர்லைன் கே.ரயில் திட்டம் குறித்தும் விவாதித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. கேரள அரசுக்கும், ரயில்வே துறையிக்கும் இடையேயான கே.ரயில் திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளது.
கொச்சி-பெங்களூரு சாலைக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அறிவித்த நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
சில்வர்லைன் ரயில் திட்டம் : 529 கிலோ மீட்டர் தொலைவிலான சில்வர்லைன் ரயில் திட்டம் திருவனந்தபுரத்தில் இருந்து தெற்கு காசர்கோடு வரை செல்கிறது. இந்தச் சாலை 11 மாவட்டங்களை இணைக்கிறது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு 4 மணி நேரத்தில் சென்றுவிடலாம். தற்போது இங்கு செல்ல 12 மணி நேரம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “இது நடைமுறை மற்றும் அறிவியலுக்கு ஒப்பானதாக இல்லை” என அக்கட்சி சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும் சில்வர்லைன் ரயில் திட்டத்துக்கு எதிராக மாநிலத்தில் போராட்டங்களும் நடைபெற்றுவருகின்றன. இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு ஒருபுறம் வலுத்துவரும் நிலையில், மறுபுறம் திட்டத்தை நிறைவேற்றுவதில் பினராய் விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசாங்கம் உறுதியாக உள்ளது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் பினராய் விஜயன் டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : “காங்கிரஸ் மென்மையான இந்துத்துவாவை கடைப்பிடிக்கிறது”- பினராய் விஜயன்!